நூல் அரங்கம்

ஊடகப் பறவையின் ஞாபகச் சிறகுகள்

18th Sep 2023 08:46 PM

ADVERTISEMENT

ஊடகப் பறவையின் ஞாபகச் சிறகுகள் - எம்.எஸ்.பெருமாள்;  பக். 408; ரூ.400; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2434 2810.

ஊடகத் துறையினரின் தினசரி வாழ்க்கை புதுப்புது அனுபவங்களைக் கொண்டிருக்கும்.  அந்த வகையில், 1969-ஆம் ஆண்டு முதல் 2005 வரை வெகுஜன ஊடகங்களில் பயணித்த நூலாசிரியர், சென்னைத் தொலைக்காட்சி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற 15 ஆண்டுகளுக்குப் பின்னர் தனது ஊடகப் பயண நினைவுகளை நூலாகப் படைத்திருக்கிறார்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளைக்கூட  நாளும் நேரமும் குறிப்பிட்டு எழுதியிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

எஸ்.பி.பி.யின் முதல் பாடலை வானொலியில் முதலில் ஒலிபரப்பியதால் ஏற்பட்ட சிக்கலும் அதிலிருந்து மீண்ட விதம், முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்டோருடன் பழகிய அனுபவங்களை சுவாரசியமாக விவரித்துள்ளார். முத்தமிழ் முழக்கம், பாட்டுப் பரம்பரை, எழுத்தாளர்களின் பங்களிப்பு, குறையொன்றுமில்லை, நட்சத்திரங்களும் நானும், மலரும் நினைவுகள் உள்பட 21 தலைப்புகளில் கட்டுரைகள் அலங்கார வார்த்தைகளின்றி இயல்பாக பயணிக்கின்றன.

ADVERTISEMENT

2000-ஆம் ஆண்டில் 24 மணி நேர அரசுத் தொலைக்காட்சி தொடங்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவின்பேரில், புதிய தொலைக்காட்சிக்கு பெயர் சூட்டும் பணியை நேயர்களுக்கு ஒப்படைத்தபோது வந்த ஆயிரக்கணக்கான கடிதங்களில் ஏழாம் வகுப்பின் மூன்று மாணவர்களும், அவர்களுடைய வகுப்பு ஆசிரியரும் ஒரே அஞ்சல் அட்டையில் சூட்டிய பெயரான 'பொதிகை டி.வி.' என்ற பெயர் தேர்வுக்குள்ளானது உள்ளிட்ட சுவாரசிய தகவல்கள் ஏராளம். இன்றைய ஊடகவியலாளர்களுக்கு மட்டுமல்ல; பல்வேறு துறைகளைப் பற்றி அறிய விரும்புவோருக்கும் தகவல் களஞ்சியம் இந்த நூல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT