யாதும் ஊரே யாவரும் கேளிர் (தமிழ்-சமூகம்-திருக்குறள்), வி.ஜி.சந்தோசம், பக்.244; ரூ.250, சந்தனம்மாள் பதிப்பகம், சென்னை-15; ✆ 044-6625 9999.
இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, பிலிப்பின்ஸ், கம்போடியா, நார்வே, ஆஸ்திரேலியா, மாலத்தீவு உள்பட தமிழர்கள் பரவியுள்ள நாடுகளுக்குச் சென்று வந்துள்ள நூலாசிரியர் தனது பயண அனுபவங்களை எளிய நடையில் பகிர்ந்துள்ளார்.
புலம்பெயர்ந்த தமிழர்களின் தமிழ் உணர்வு, தமிழ்ப் பற்று, தமிழ்ச் செல்வாக்கு; பொங்கல் பண்டிகை உலக நாடுகளில் எவ்வாறு கொண்டாடப்படுகிறது?, பழந்தமிழரின் தன்னிகரற்ற படைப்பான தொல்காப்பியத்தின் சிறப்புகள், இலங்கையில் தமிழ் சொல்லாக்கம், உலக நாடுகளில் பரவியுள்ள தமிழும் தமிழரும் குறித்த தகவல்கள் வியப்பூட்டுகின்றன. தமிழர்கள் மேற்கொண்ட கடற்பயணத்தின் எச்சங்கள் உலகின் பல பாகங்களில் மிச்சமிருப்பதை அறிய முடிகிறது. நம் நிலப்பரப்பை ஆட்சி செய்த மன்னர்களின் காலப் பகுப்பு, குறிப்பாக, சோழ மன்னர்களின் தனிச்சிறப்புகள், கட்டடக் கலைகள் குறித்த பயனுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
பழந்தமிழருக்கு காலனிப்படுத்துதல் குறித்த கண்ணோட்டம் இருந்திருந்தால் இந்தியாவுக்கு கிழக்கே ஜப்பானிய கடற்கரை வரையிலும் உள்ள அனைத்து நாடுகளிலும் இன்று தமிழ் மொழியே ஆட்சி மொழியாக இருந்திருக்கும் என்பதை இந்நூல் தெளிவுபடுத்துகிறது.
'திருக்குறள் சிந்தனைகள்' பகுதியில் குமரிமுனை, நாவினால் சுட்ட வடு, இல்லறத்தின் மாண்பு, அன்பில் பெருமை போன்ற துணைத் தலைப்புகளின் கீழ் திருக்குறள்களை பட்டியலிட்டு வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை மேற்கோள் காட்டியிருப்பது கூடுதல் சிறப்பு.