தண்ணீர் - நீரலைகளும் நினைவலைகளும் - தொகுப்பு: மதுமிதா; பக்.550; ரூ.550; ஸ்நேகா, மேற்கு தாம்பரம்-45; ✆ 98401 38767.
தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து ஆக்கபூர்வ முயற்சிகளை முன்னெடுக்கும் 60 எழுத்தாளர்களின் சிந்தனைத் தொகுப்பே இந்நூல். அடுத்து ஒரு உலகப் போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில்தான், அதை விலையை நிர்ணயிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
அழியாத்தன்மை வாய்த்த தண்ணீரைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். அவரவர் பங்குக்கான நீரைப் பெறுவதற்காக வன்முறையைக் கையிலெடுக்கும் அளவுக்கு கடின மனம் கொண்டவர்களாக மாறிவிட்டோம் என்பதை இத்தொகுப்பு சுட்டிக்காட்டுகிறது.
அடிப்படைத் தேவையான நீரை முறையாகச் சேமித்து, பாதுகாப்பதில் நமது விழிப்புணர்வு பூஜ்ஜியத்துக்கும் கீழாகச் சென்றுவிட்டது என்பதை எழுத்தாளர்கள் விவரிக்கின்றனர்.
2019-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-இல் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லாத நிலையை உதாரணம் காட்டி, தண்ணீரைப் பாதுகாக்க அரசு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இத்தொகுப்பு எடுத்தியம்புகிறது.
தண்ணீரின் மீதான தாகமும், பாதுகாக்க இத்தொகுப்பு வெளிப்படுத்தும் அனுபவமும் அக்கறையும் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளிப்பதாக இருக்கிறது.
பழங்கால மக்கள் தண்ணீரைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வுடன் இருந்தனர். இன்றைய சூழலிலும் அதுகுறித்த அக்கறை நமக்கு இருக்கிறதா என்று நம் மனசாட்சியை கேட்டுக்கொள்ளும் வகையிலான தொகுப்பு இது.