நூல் அரங்கம்

தமிழில் சிறு பத்திரிகைகள்

18th Sep 2023 08:35 PM

ADVERTISEMENT

தமிழில் சிறு பத்திரிகைகள் - வல்லிக்கண்ணன்;  பக். 352; ரூ.350;  மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பிராட்வே, சென்னை - 104.

நா. பார்த்தசாரதியின் 'தீபம்' இலக்கிய இதழில் தொடராக எழுதப்பட்ட 56 கட்டுரைகளின் தொகுப்புடன் மேலும் இரு கட்டுரைகள் சேர்க்கப்பட்ட நூல்.

அறிமுகத்திலும் சில முன்னோடிகளிலும் சிறப்பான விவரிப்பைத் தரும் ஆசிரியர், மணிக்கொடியில் தொடங்கி, தேவையான இதழ்களைப் பற்றி விரிவாகவும் சிலவற்றைப் பற்றி சுருக்கமாகவும் பதிவு செய்திருக்கிறார். மணிக்கொடி, கலாமோகினி, கிராம ஊழியன், சரஸ்வதி, சாந்தி, எழுத்து போன்ற தொடக்க கால சிறு பத்திரிகைகள் பற்றி  இன்றைய வாசகர்களும் அறிந்துகொள்ளும் விதத்தில் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது.

'ஒரு தனி மனிதனின் பிடிவாதமும் உழைப்பும் கருத்து ஆழமும் கனமும் கொண்ட இலக்கியப் பத்திரிகை'யை நீடித்து வாழவைக்க முடியாமல் போயிற்று என்று 'எழுத்து' வையும் சி.சு. செல்லப்பாவையும் பற்றி வலியுடன் குறிப்பிடுகிறார். ஆசிரியரின் விருப்பு வெறுப்பற்ற பார்வைக்கும் கட்டுரைகளின் துல்லியத்துக்கும் கொல்லிப்பாவை இதழ் பற்றிய கட்டுரை சிறந்த எடுத்துக்காட்டு.

ADVERTISEMENT

'சில தகவல்கள்' கட்டுரையில் வை.கோவிந்தனின் சக்தி,  ஏ.கே.செட்டியாரின் குமரி மலர், க.நா.சு.வின் ராமபாணம் போன்ற வெளியீடுகளைப் பற்றியும் தகவல்கள் தரப்பட்டுள்ளன. சிதைந்த கனவுகள், முற்போக்கு இலக்கிய இதழ்கள், சில புதிய முயற்சிகள், இடதுசாரிப் பத்திரிகைகள், வித்தியாசமான வெளியீடுகள், இன்னும் சில பத்திரிகைகள் என்பன போன்ற தலைப்புகளில் பெரும்பாலான இதழ்களை அறிமுகப்படுத்திவிடுகிறார் ஆசிரியர்.

சிறு பத்திரிகைகள் பற்றி எத்தனை நூல்கள் வந்தாலும் மிக முக்கியமானதாகவும் நடுநிலையான பார்வை கொண்டதாகவும் இருக்கின்றன. வல்லிக்கண்ணனின் நூலும் எழுத்துகளும். 

ADVERTISEMENT
ADVERTISEMENT