சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும் - குரு அரவிந்தன்; பக். 224; ரூ.200; இனிய நந்தவனம் பதிப்பகம், திருச்சி-3; ✆ 9443284823.
ஈழத்திலிருந்து கனடாவில் குடியேறிய நூலாசிரியர் எழுதிய 24 அயல்நாட்டு அனுபவக் கதைகளின் தொகுப்பே இந்த நூல். இவை முற்றிலும் புனையப்பட்ட கதைகள் என்று கூற முடியாது. பல்வேறு அனுபவங்கள் கதையாக வடிவம் பெற்றுள்ளன. உலக நாடுகள் பலவற்றிலும் பரந்து விரிந்து பட்டதாக உள்ளது அவரது கதை உலகம்.
புலம்பெயர் சூழலில் தனக்கு கிடைத்த வித்தியாசமான அனுபவங்களை கதைகளாக்கித் தர வேண்டும் என்ற விருப்பம் தான் உலக சிறுகதைகளை எழுத தன்னை தூண்டியதாக கதாசிரியர் குறிப்பிடுகிறார்.
கதைப் பொருளிலும் எத்தனை எத்தனை ரகங்கள்! போர்ச்சுகல் நாட்டு திராட்சை மது, சோமாலியா கலகம், விமானப் பயணங்கள், அலாஸ்கா சுற்றுலா, இத்தாலியின் ஃபிளாரன்ஸ் அருங்காட்சியகத்தில் டேவிட் சிற்பம்... இப்படி பல ரகங்கள். அயல் மண் என்பது சுற்றுலா இடமாக இல்லாமல் கதைக்களமாக அமைவது இந்த கதைகளின் தனித்துவம். அநேகமாக எல்லா கதைகளுமே பல அனுபவங்களின் எதிர் வினைகளாக உருப் பெற்றிருக்கின்றன.
ஈழ கிராமத்திலும் நேபாள நகரத்திலுமாகப் பிரிந்து வாழும் இரு சகோதரிகளின் மிக வேறுபட்ட வாழ்க்கை அனுபவத்தை அனுதாபத்துடன் கூறுகிறது 'சௌப்படி'.
எத்தனை நவீனம் பேசினாலும் உள்ளத்தின் ஆழத்தில் பழைமை ஒட்டியிருப்பதை கண் கூசும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது 'அடுத்த வீட்டுப் பையன்' கதை. எழுத்துக் கலை கை கூடி வந்துள்ள இவருக்கு ஆழமான படைப்புகள் சாத்தியம் என்பது இந்த நூலில் பல இடங்களில் பளிச்சிடுகிறது.