1857 இந்தியப் புரட்சி - ப.சரவணன்; பக்.112, ரூ.140; சுவாசம் பதிப்பகம், சென்னை - 127; ✆ 81480 66645.
ஆங்கிலேய ராணுவத்தில், இந்திய வீரர்களிடையே ஏற்பட்ட 1857 புரட்சியை விளக்குகிறது இந்த நூல். கிழக்கிந்திய கம்பெனி வரலாறு, சிப்பாய் புரட்சியின் பின்னணி, நடைபெற்ற விதம், அதன் விளைவுகள் உள்ளிட்ட தகவல்களை எளிய மொழியில் கையாண்டுள்ளது இந்த நூல்.
ஆங்கிலேய அடக்குமுறைகளுக்குப் பணிந்து பழக்கப்பட்ட இந்தியர்களிடையே பிரெஞ்சுப் புரட்சி, ஸ்பெயின், போர்ச்சுகீசிய பேரரசுகளிடமிருந்து விடுதலை பெற்ற நாடுகளின் போராட்டங்கள் குறித்த செவிவழித் தகவல்கள் இந்திய விடுதலை பற்றிய ஒரு கனவை உருவாக்கியது.
இந்தியா ஒரு குடையின் கீழ் வந்ததால், "எல்லோரும் இந்திய நாட்டு மக்களே' எனும் எண்ணம் மக்கள் மனதில் தேசிய உணர்வை ஊட்ட அடித்தளமாக அமைந்தது. இந்த உணர்வே நாடு விடுதலை அடையும் என்ற நம்பிக்கையை கொடுத்தது. இதனிடையே ஆங்கிலேயர்களின் அடக்குமுறை கொள்கைகளால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர பேஷ்வா நானா சாகிப், ஜான்சி நாட்டின் ராணி லட்சுமி பாய், அவத் நாட்டின் அரசி பேஹம் ஹஸரத் மஹல் உள்ளிட்டோர் இணைந்து புரட்சிப் படையை உருவாக்கி, 1857-ஆம் ஆண்டு மே 31-இல் புரட்சிக்கு நாள் குறித்தனர்.
ஆனால், ஆங்கிலேயர்களோ, இந்தியர்களிடம் மதம் சார்ந்த அடக்குமுறையை கையாண்டதால் முன்னதாகவே வீரர்கள் மத்தியில் பெருமளவில் புரட்சி வெடித்தது. திட்டமிடாத புரட்சி நெடுநாள் நீடிக்கவில்லை. புரட்சியுடன் சேர்த்து கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. இதனால், ஆட்சி பிரிட்டிஷ் அரசி வசம் சென்றது. இந்திய விடுதலைப் போராட்டத்துக்கான தொடக்க கால நிகழ்வுகளை அறிய இந்த நூல் சிறந்த வழிகாட்டி.