தேவ ரகசியம்- காலச்சக்கரம் நரசிம்மா; பக்.420; ரூ.350; வானதி பதிப்பகம், சென்னை-17; ✆ 044- 2434 2810.
எழுத்தாளர் குடும்பத்தைச் சேர்ந்த நூலாசிரியரின் துப்பறியும் நாவல்கள் தனிச்சிறப்பைப் பெற்றவை. தனது நாவல் ஒன்றில் முதல்முறையாக உடல் ஊனமுற்ற பெண்ணை துப்பறியச் செய்துள்ளார்.
இந்த நாவலில் அரசியல் தலைவர் ஒருவரின் மரணத்தின் பின்னணியை ஆராய்வதில் ஊடகத் துறையைச் சேர்ந்த ஆத்மிகா என்ற பெண்ணை ஈடுபடுத்தி இருக்கிறார். பிற நாவல்களைக் காட்டிலும், தனித்துவமாக இருக்கிறது.
46 அத்தியாயங்களில் நாவல் படிக்கப் படிக்க விறுவிறுப்பாகச் செல்கிறது. எந்த நிகழ்ச்சியின் பின்னணியையும் அறிந்து கொள்ளும் குறுகுறுப்பு பெண்களுக்கு இயற்கையாகவே உண்டு என்பதை இந்த நாவலில் படிக்கும்போதே உணர முடிகிறது. முதல் அத்தியாயத்தில் கூறப்படும் ரகசியம் எப்போது வரும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டாலும், கடைசிப் பக்கங்களில்தான் அதை அறிய முடிகிறது.
நாவல் என்றாலும் தற்கால அரசியலையும் தாழ்ந்துபோன தரத்தையும் படம் பிடித்துகாட்டும் படைப்பாகும். பதவிச் சுகத்துக்காக ஏங்கும் முன்னணித் தலைவர்கள், உடல் நலம் குன்றியுள்ள தலைவரைப் பற்றிகூட கவலைப்படாமல் உள்ள நட்புகளின் உரையாடல்கள், முக்கியத் தலைவர்களின் பேச்சுகள்... போன்ற அன்றாட நிகழ்வுகள் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன.
நாவல் வாசகர்களும், அரசியல் ஆர்வலர்களும் படிக்க வேண்டிய நல்லதொரு நூல்.