அகம் - பெருவெளியில் தனியொருவள் - கட்டுரைகள் தொகுப்பு - மதுமிதா; பக். 270; ரூ.300; ஹெர் ஸ்டோரிஸ், சென்னை-4; ✆ 75500 98666 .
உழைக்கும் மகளிர் நாளையொட்டி, எழுத்தாளர்களும் செயற்பாட்டாளர்களுமான 35 பெண்களை எழுதச் செய்து தொகுக்கப்பட்ட கட்டுரைகளின் நூல் வடிவம்.
வரலாற்றில் பெண்களின் உழைப்பு குறைந்த அளவிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. அகம் சார்ந்தும் புறம் சார்ந்தும் பெரியளவில் இயங்கும் பெண்களின் உழைப்பும் வெற்றியும் மறைக்கப்பட்டு ஆண்களுடையதாகவே வெளிப்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. கட்டுரையாளர்கள் வெவ்வேறு தளங்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அகம் சார்ந்து தங்கள் எண்ணங்களையும் அனுபவங்களையும் எழுத்துகளில் வடித்துள்ளனர்.
அகமொளிர் சிவஞானமென ம.பொ.சி.யை நினைவுகூர்கிறார் தி. பரமேசுவரி. நிவேதிதா லூயிஸின் கட்டுரை அம்மாவையும் விக்கிரமசிங்கபுரத்தையும் உற்சாகமாக வலம் வருகிறது.
புரிபடாத ஒரு தருணத்தில் திருமணத்திலிருந்து ஆயம்மா என்கிற வளையாத்தூர் ஆயா எவ்வாறு காப்பாற்றினார் என்று வியக்கிறார் பிருந்தா சீனிவாசன். குழந்தைமையுடன், தன் முன்னேற்றத்தில் பங்களித்த ஒவ்வொருவரையும் நினைத்து விவரிக்கிறார் பேராசிரியை சோ. மோகனா.
உள்ளுணர்வு பற்றிய முபீன் சாதிகாவின் கட்டுரை ஆய்வு நோக்குடன் கூடிய முற்றிலும் மாறுபட்ட, படிக்க வேண்டிய ஒன்று. கனலி, எஸ். சுஜாதா போன்றோரின் கட்டுரைகளில் அப்பாக்கள் வருகிறார்கள். சொல்வதற்கும் பேசுவதற்கும் எண்ணற்ற மையக் கருத்துகளும், இன்னும் பலரும் இருக்கின்றனர். தமிழில் இத்தகைய தொகுப்புகள் மேலும் வர வேண்டும். நல்ல முயற்சி.