நூல் அரங்கம்

தமிழ் நாடகச் சரித்திரம்

2nd Oct 2023 11:49 AM

ADVERTISEMENT

தமிழ் நாடகச் சரித்திரம் (மரபிலிருந்து நவீனத்துக்கு) முனைவர் சு.சண்முகசுந்தரம்; பக்.388; ரூ.400; காவ்யா, சென்னை- 24; ✆ 044- 2372 6882.
 பள்ளி மாணவராக நாடகங்களில் நடித்தவர் நூலாசிரியர். பின்னர், கல்லூரி ஆசிரியராக நாடகங்களைப் படைத்ததையும் நூலின் முகப்பில் கூறியிருக்கிறார். தொல்காப்பிய காலம், சங்கக் காலங்களில் நாடகங்களின் முன்னெடுப்புகளை விவரித்துள்ள நூலாசிரியர் சிலப்பதிகார காலத்தில் இந்திர விழாவின் இறுதிநாளில் 11 வகை நாடகங்களை மாதவி நிகழ்த்தியதையும், அதன் கதைச் சுருக்கத்தையும் கொடுத்திருக்கிறார்.
 சிலப்பதிகாரத்தில் அரங்கு நிர்மாணம்- இசை அமைப்பு- நாடக மகளிரின் வாழ்வியல் குறித்தெல்லாம் குறிப்பிட்டிருப்பதாகவும் விவரித்துள்ளார். சோழர் காலத்தில் "இராசரேச்வரம்', பல்லவர் காலத்தில் மகேந்திர பல்லவனே எழுதிய மத்தவிலாச பிரகசனம் நாடகத்தையும் குறிப்பிட்டுள்ளார். இசுலாமிய, கிறிஸ்தவ, நாயக்கர் கால விவரங்களுடன் 16-18-ஆம் நூற்றாண்டுகளில் கீர்த்தனைகள், அருணாசல கவிராயர் எழுதிய ராமநாடகக் கீர்த்தனைகள் பிரபலமானதையும் நூலாசிரியர் விவரித்துள்ளார்.
 முன்னோடி நாடகக் கலைஞர்கள் வரிசையில் பெ. சுந்தரம் பிள்ளை, பரிதிமாற்கலைஞர், சங்கரதாஸ் சுவாமிகள் (68 நாடகங்கள் பட்டியல்), பம்மல் சம்பந்த முதலியார் (94 நாடகங்கள்), விடுதலை இயக்க நாடகங்கள் பி.யு.சின்னப்பா தொடங்கி, பாய்ஸ் கம்பெனி வரை 76 அமைப்புகள் குறித்தும், பின்னர் வந்த நாடக மன்றங்கள் வகையில் 42 மன்றங்கள் உருவாகி நாடகங்கள் படைத்த பிரமுகர்கள் பற்றியும் ( டி.கே.எஸ்.சகோதரர்கள், சகஸ்ரநாமம் இதில் அடக்கம்), திராவிட இயக்க நாடகங்கள் என்று பாரதிதாசன், கலைவாணர், எம்.ஆர்.ராதா, அண்ணா, கருணாநிதி முதலானவர்களின் பிரசார நாடகங்கள் குறித்தும், பிற்காலத்தில் அசோகமித்திரன் தொடங்கி நவீன நாடகங்கள் வரிசையில் பெண்ணியம், தலித்தியம் நாடகங்களும் அதன் தோற்றமும் வரலாறும் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, நிஜ நாடகங்கள் வரலாறும் உண்டு.
 நூல் முழுவதும் ஏராளமான பிரபலங்கள்- தகவல்கள், நாடகக் கதைகள், நாடக நூல்கள் விவரங்கள் தொகுக்கப்பட்டிருப்பது சிறப்பு. நாடக ரசிகர்களுக்கு நல்லதொரு நூல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT