திருக்குறளில் மென்திறன்கள்- ம.திருமலை; பக்.166; ரூ.150; செல்லப்பா பதிப்பகம், மதுரை- 625001; ✆ 0452-2345971.
"தனிமனிதனின் வாழ்க்கைக்கும், சமூகப் பொது வாழ்க்கைக்கும் வழிகாட்டுகிறது, கடமைகளையும், நற்பண்புகளையும், நற்செயல்களையும் வரையறை செய்கிறது, தீய பண்புகளையும், தீய செயல்களையும் வெறுத்து ஒதுக்கி அறிவுக்கும் ஆற்றலுக்கும் மதிப்பு அளிக்கிறது..' என்று திருக்குறளின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். அதில் சொல்லப்படாத கருத்துகளே இல்லை.
அந்த வகையில் திருக்குறளின் பல நுட்பமான கூறுகளை கூட்டுணர்வும் கலந்துரையாடலும், அறிவின் மாண்பு, முரண்பாடுகளைத் தவிர்த்தல், முடிவெடுக்கும் திறன், கால மேலாண்மை, திருக்
குறளின் செல்வாக்கு உள்ளிட்டவற்றை 16 கட்டுரைகளில் அடக்கி அளித்திருக்கிறார் நூலாசிரியர்.
உலகின் அனைத்து தன்முனைப்பு மேம்பாட்டு கருத்துகளின் சாறுகளையும் பிழிந்து கொடுக்கும் ஒட்டுமொத்த நூலாக திருக்குறள் விளங்குகிறது என்பதை நூல் ஆழமாக வலியுறுத்துகிறது. மாணவர் மனங்களில் திருக்குறள் கருத்துகளை ஆழமாக விதைக்க வேண்டும் என்றும் மனப்பாடம் செய்வதிலிருந்து மாணவர்களை மாற்ற வேண்டும் என்றும் அழுத்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.
நாள்களைப் பயனுள்ளவையாக மாற்றுதல், பெரிதான முயற்சிகளில் ஈடுபடுதல், தன்னையே கொண்டாடிக் கொள்ளுதல், சமூகத் திறன்கள், காலத்துக்கேற்ப மாற்றிக் கொள்ளுதல், தலைமைப் பண்பு, முரண்களைத் தவிர்த்தல் என வாழ்வுக்குத் தேவையான அத்தனை விஷயங்களும் திருக்குறளில் எவ்வாறு பொதிந்திருக்கின்றன என்பதை அவற்றுக்கான திருக்குறள் மூலம் சுட்டிக்காட்டுவதோடு, அதனை நடைமுறை வாழ்வில் எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. தமிழ் ஆர்வலர்கள் வாசிக்க வேண்டிய நூல்.