நூல் அரங்கம்

ஆத்ம சகோதரன்

22nd May 2023 12:00 AM

ADVERTISEMENT

ஆத்ம சகோதரன் - தாவித் தியோப் (தமிழில் - எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி);  பக்.  112; ரூ. 150;  காலச்சுவடு பதிப்பகம்,  நாகர்கோவில் - 629001;  ✆ 04652 - 278525.

பிரெஞ்சிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, புக்கர் பரிசு பெற்ற நாவல். ஆப்பிரிக்காவில் பதுங்குகுழியில் காத்திருந்தவாறு  பிரான்ஸுக்காக போரிடுகிறவனுடைய மனவோட்டத்தின் கதை.  நண்பனின் அதீதமான இறப்பை நினைத்துப் பார்ப்பதில் தொடங்கி, நினைவுகளாகவே நகர்ந்துசெல்கிறது.

கதைசொல்லியாக வரும் கறுப்பின ஆப்பிரிக்கரான 'வயது முதிர்ந்த ஒருவரின் மகன்' அல்பா நிந்தியாயே, 'தன் சகோதரனுக்கு மேலான  நண்பன்' மதெம்பாவை நினைத்துதான் நாவலின் முழுக் கதையையும் சொல்கிறான்.

போர்க்களத்தில் தன் கண் முன்னால் நேரிடும் மரணம், அதன் தாக்கத்தால் விளையும் அடுத்தடுத்த மரணங்கள், அதனால் தொடக்கத்தில் நிந்தியாயே பெறும் புகழும் தொடரும் பாதிப்புகளும் எனச் செல்கிறது நாவல். கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் நிந்தியாயேவைக் கடந்து செல்லும் இரு பெண்களைப் பற்றியும்  விவரித்துச் செல்லும் கதையின் போக்கில் சொந்த கிராமத்தைப் பற்றிய சித்திரமும் கிடைக்கிறது.

ADVERTISEMENT

உண்மையில் பைத்தியக்காரர்களால்தான் எதையும் கண்டு பயப்படாமல் இருக்க முடியும்..  ஒவ்வொரு நிகழ்வுக்கும் மனிதன் அபத்தமான முறையில் ஒருவரைப் பொறுப்பேற்க வைக்க முயற்சிக்கிறான்... என போகிறபோக்கில் நிந்தியாயேவின் சொற்களில் ஏராளமாகச் சொல்கிறார்  நாவலாசிரியர். 

'நிகழ்வுகள்தான் மனிதர்களைக் கட்டுப்படுத்துகின்றன, மனிதன் நிகழ்வுகளைக் கட்டுப்படுத்துவதில்லை'  என்று தொடங்கும் வாழ்க்கை ரகசியங்கள் பற்றிய கிராமத்து முதியவரின் தீட்சை மொழிகள் பெருந்திறப்பு. மாறுபட்ட எழுத்து நடையின் ஆழத்தை உணர்த்துவதாக  இருக்கிறது நாவலின் முடிவு. ஆற்றொழுக்கான நல்ல மொழிபெயர்ப்பு. வாசிக்க வேண்டிய நாவல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT