சாமானியனின் முகம் - சுகா; பக். 200; ரூ. 240; சுவாசம் பதிப்பகம், சென்னை - 127; ✆ 81480 66645.
சாமானியனின் முகங்களைப் படித்து முடிக்கும்போது, இவற்றில் வருகிற எத்தனையோ நபர்களை வெவ்வேறு பெயர்களில் நம்முடைய ஊரிலும் நாம் பார்த்திருக்கும் நினைவுகள் வந்தால் வியப்பதற்கில்லை.
இவற்றை இசைக் கட்டுரைகள் என ஆசிரியர் குறிப்பிட்டாலும் மனிதர்களையும் மனிதத்தையும் பற்றியவைதான் இவை.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் போய்விட்டுப் பின்னர் சென்று சந்திக்கும் பெரியவர் வாலேஸ்வரன் பற்றிய அற்புதமான விவரணை அவரையே கொண்டுவந்து கண்முன் நிறுத்துகிறது.
இவரைப் போலவே, ஒரு சிறு காட்சியில் வந்து அழியாத் தடம் பதிக்கிறார் இசையாசிரியர் கிருஷ்ணன் சார். அறிமுகமும் அவரிடம் கேட்ட சந்தேகமும் விளக்கமும்கூட சிறப்பு.
ரயிலிலேயே அறிமுகமானாலும் இறங்கியதும் காணாமல்போய்விடும் துயரம் திருநவேலியும் திருநெல்வேலியும் கட்டுரையில். தொ.ப. பற்றிய அறிமுகத்தை வாசித்து, அவர் என்ன நினைத்திருப்பாரோ தெரியவில்லை, கன கச்சிதம்.
நெல்லைப் பகுதியில் லொகேஷன்கள் எல்லாம் பார்த்துவிட்டு வந்த பிறகு ஊருக்குத் திரும்பும் நாளில் கணேசண்ணன் கேட்கிற கேள்வியில் இருக்கிறது ஊருக்கு உரிய அப்பாவித்தனம்.
நாக்கு கட்டுரையில் அறிமுகமாகும் உணவுக் கடைகளைப் போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வோர் அனுபவம் இருக்கும், சென்னையில், வெளியூர்களில்... இவர் எழுதிப் பகிர்ந்துள்ளார், சொல்ல முடியாத சுவைக்க மட்டுமே தெரிந்த அதே ருசியுடன்.
திருநெல்வேலி வட்டார வழக்கின் தனித்துவத்தை வெளிப்படுத்துகிற எழுத்துகள்.