உங்கள் இரத்தமே நீங்கள் - டாக்டர் டி.பி. ராகவ பரத்வாஜ்; பக்.176; ரூ.200; பிரைய்ன் பேங்க், சென்னை -17; ✆ 044-28151160.
தலைசிறந்த குருதியியல் மருத்துவ நிபுணரான நூலாசிரியர், சாமானியனுக்கும் புரியும் வகையில் ரத்தத்தின் முக்கியத்துவத்தை எளிய நடையில் எடுத்துரைத்திருக்கிறார்.
உடலில் ரத்தத்தின் பணிகள் என்ன?, அதில் உள்ள கூறுகள் என்ன? ,அவற்றில் ஏற்படும் மாற்றங்களும், விளைவுகளும் என்ன?, ரத்தம் சார்ந்த நோய்கள் என்னென்ன? என பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட்டிருக்கிறது.
ரத்த வகைகளையும், அதில் உள்ள சில விநோதங்களையும், அதனால் கருவில் உள்ள சிசுவுக்கு ஏற்படும் பாதிப்பையும் விளக்கியிருப்பது விழிப்புணர்வைத் தரும் தகவல்கள்.
ரத்த சோகை தொடங்கி, சிக்கில் செல் அனிமியா, தலசீமியா, ஹீமோபிலியா, ரத்தப் புற்றுநோய் என குருதி சார்ந்த பல நோய்களை எளிமையாக விளக்கியிருக்கிறார் நூலாசிரியர்.
அதனுடன் நில்லாமல், அதற்கான காரணங்கள், சிகிச்சைகள், தடுப்பு முறைகளையும் விளக்கியுள்ளார். உண்ணும் உணவு எப்படி ரத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதும், எத்தகைய உணவை உண்ண வேண்டும் என்பதும் சமகாலத் தலைமுறைக்கு கட்டாயமாக கடத்த வேண்டிய விஷயங்கள்.
மருத்துவ அறிவியல் நூல் என்பதைத் தாண்டி அதற்குள்ளே திருக்குறளையும், திருமந்திரத்தையும், இலக்கியங்களையும் ஆங்காங்கே மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு.
ஒவ்வொரு துளி உதிரமும் உயிருக்கு அச்சாரம் என்ற உண்மையைச் சொல்லும் நூல் இது.