நூல் அரங்கம்

1975 எமர்ஜென்ஸி நெருக்கடி நிலைப் பிரகடனம்

17th Jul 2023 07:14 PM

ADVERTISEMENT

1975 எமர்ஜென்ஸி நெருக்கடி நிலைப் பிரகடனம் - ஆர்.ராதாகிருஷ்ணன்; பக்.192; ரூ.240; சுவாசம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிமிடெட்,  சென்னை - 127; ✆ 8148 066645.

1975-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் அமல்படுத்தப்பட்ட நெருக்கடிநிலையை இந்த நூல் அலசுகிறது. 'நெருக்கடி நிலை இந்தியாவில் வந்ததில்லை, பின்னும் வரவில்லை, இனியும் வரப்போவது இல்லை' என்று குறிப்பிடும் நூலாசிரியர்,  இந்திராவின் எழுச்சி, வீழ்ச்சி, மீண்டும் எழுச்சி என்ற மூன்று பிரிவுகளில் நெருக்கடி நிலை அடங்குகிறது என்றும் எடுத்தியம்புகிறார். 

1971 மக்களவைத் தேர்தலில் இந்திரா வெற்றி பெற்றது செல்லாது என்று அலாகாபாத் நீதிமன்றம் அளித்த தீர்ப்பே நெருக்கடி நிலைக்கு காரணம் என்றாலும்  முழு முற்றான காரணம் அதுவல்ல;  அதற்கு முன்பு நடந்த சம்பவங்கள், நெருக்கடி நிலை என்றால் என்ன,  அதை அறிவிக்க வேண்டிய அவசியம், தாக்கங்கள்,  அறிவித்தவர்களுக்கும்  பாதிக்கப்பட்டவர்களுக்குமான நிலை.. என்று உள்ளது உள்ளபடி வரலாற்றை திரும்பிப் பார்க்கும் முயற்சியாக நூல் எழுதப்பட்டுள்ளது.  

ஜெயபிரகாஷ் நாராயண் சிறை வைக்கப்பட்டிருந்ததை யாருமே அறியாத நிலையில் அவரது முகவரிக்கு ஆஸ்திரேலியத் தம்பதியர் தந்தி கொடுத்தது,   அரசை ஏமாற்றிவிட்டு சுப்பிரமணியன் சுவாமி அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தது உள்ளிட்ட சம்பவங்கள் இந்தியாவின் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக இருந்தது என்பதை எடுத்துரைக்கிறது. 

ADVERTISEMENT

அரசை  எதிர்த்த நாளிதழ்களுக்கு  எதிரான நடவடிக்கையில் அன்றைய அரசு ஈடுபட்டதும் நூலில் விளக்கப்பட்டுள்ளது.

'அரசின் கொடுங்கோன்மை' என்று விமர்சித்தவர்களும் உண்டு. 'தறிகெட்ட சுதந்திரத்துக்குப் போடப்பட்ட கடிவாளம்' என்று ஆதரித்தவர்களும் உண்டு. நெருக்கடி நிலை குறித்து இன்றைய தலைமுறையினர் அறிய இந்நூல் வழிகாட்டியாக இருக்கும். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT