சிராஜுல் மில்லத் ஒரு சகாப்தம் - சேயன் இப்ராகிம்; பக்கம் 296, ரூ.300, யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை-17; ✆ 044-2834 3385.
தமிழக முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் ஆய்ந்தறியப்படாத, வெளிச்சத்துக்கு வராத பல பகுதிகள் உள்ளன. அந்த வகையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்களான காயிதே மில்லத், கே.எஸ். அப்துல் வஹாப் ஜானிக்குப் பின்னர் வழிநடத்திய சிராஜுல் மில்லத் அப்துல் சமதின் வாழ்க்கை வரலாற்றின் ஓர் விரிவான அறிமுகத்தை தரும் வகையில் இந்த நூல் அமைந்துள்ளது.
அப்துல் சமதுவின் இளமைக்காலம், அரசியல் வாழ்க்கை உள்ளிட்ட அரிய தகவல்களைக் கொண்ட நூல்,. அவருக்கு அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் இருந்த அரசியல் உறவை விளக்குகிறது.
வேலூர் கோட்டையில் இருக்கும் ஜலகண்டேஸ்வரர் கோயிலை பக்தர்களின் வழிபாட்டுக்காக திறந்து விட வேண்டும் என மக்களவையில் முன்வைத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டதும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தெப்பக் குளத்தில் நீர் நிரப்புமாறு சட்டப்பேரவையில் பேசியதும் அப்துல் சமது அனைத்து தரப்பு மக்களுக்கான குரலாக இருந்தார் என்பதை அறியச் செய்கிறது.
முஸ்லிம்களுடைய கல்வி, வேலைவாய்ப்புக்காக தனி இடஒதுக்கீடு, தமிழ் இலக்கியப் பங்கு, சமகால முஸ்லிம் அரசியல் வரலாற்று சூழலைப் புரிந்து கொள்ளும் வகையில் நூலை ஆசிரியர் எழுதியிருக்கிறார். பல புதிய தகவல்களும் உள்ளன. அரசியல், வரலாற்று ஆர்வம் கொண்டவர்களும் படித்தறிய வேண்டிய நூல் இது.