நூல் அரங்கம்

சேர சோழ பாண்டிய பல்லவர் கால கல்வெட்டுகளும் செப்பேடுகளும்

23rd Jan 2023 01:40 PM

ADVERTISEMENT

சேர சோழ பாண்டிய பல்லவர் கால கல்வெட்டுகளும் செப்பேடுகளும் - எஸ். கிருஷ்ணன்; பக்.144; ரூ.170; சுவாசம் பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., சென்னை-127;  81480 66645.

கணினித் துறையில் பணிபுரியும் வரலாற்று ஆர்வலரான நூலாசிரியர் கல்வெட்டு,  தமிழ் எழுத்துரு ஆராய்ச்சிகளில் ஆர்வம் கொண்டு எழுதியுள்ளார்.

கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்திய வரலாற்றுக் காலத்தைக் காட்டும் கண்ணாடிகள். கல்வெட்டுகள் பெரும்பாலும் நிலக்கொடைகளையும் தானங்களையும் கோயில் திருப்பணிகளையும் குறிப்பிடுவதாக இருந்தாலும்,  அக்காலச் சமுதாயம், பொருளாதாரம், நீதி முறைகள், அரசர்களின் வம்சாவளி, அவர்கள் மேற்கொண்ட போர்களைப் பற்றிய விவரங்களும் காணப்படுகின்றன.  இவை, அக்காலத்தைப் பற்றிய ஒரு சுவையான சித்திரத்தை அளிக்கின்றன. 

இவ்வாறாக, சேர, சோழ, பாண்டிய, பல்லவர்களுடைய ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளில் இருந்தும் செப்பேடுகளில் இருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கல்வெட்டுகளும் செப்பேடுகளும் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளன. 

ADVERTISEMENT

கல்வெட்டுகள், பழங்கால கல்வெட்டுகள் என்று தொடங்கி, மன்னர்கள் காலத்து கல்வெட்டுகள் என தனித்தனியே துணைத் தலைப்புகளில் கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன.  'கல்வெட்டுகள் சொல்லும் கதைகள்' எனும் கட்டுரையில் பல அரிய விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன.  'செப்பேடுகள், தமிழ்ச் செப்பேடுகள்' குறித்த கட்டுரைகளில் பல வியப்பூட்டும் உண்மைகளை நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கமாக, ஒவ்வொரு மன்னர் காலத்தைப் பற்றியே நூல்கள் இடம்பெற்றிருக்கும். ஆனால், தமிழ் மன்னர்கள் காலத்துக்கு கல்வெட்டுகள், செப்பேடுகள் குறித்து ஒருசேர நூல் எழுதப்பட்டுள்ளது சிறப்பு. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT