நூல் அரங்கம்

ஆரண்ய தாண்டவம்

23rd Jan 2023 01:31 PM

ADVERTISEMENT

ஆரண்ய தாண்டவம் - அஸ்வினி குமார் மிஸ்ரா (தமிழில் - க. மூர்த்தி); பக்.  448;  ரூ. 500;  பொன்னுலகம் புத்தக நிலையம், திருப்பூர் - 641 603, 94866 41586, 88707 33434. 

ஒடிஸாவில் அரசுப் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலரான அஸ்வினி குமார் மிஸ்ரா, ஆங்கிலத்தில் எழுதிய 'ஃபீட் இன் தி வேலி' என்ற நாவலின் மொழிபெயர்ப்பே ஆரண்ய தாண்டவம்.  நாவலின் உயிரோட்டம் சற்றும் குறையாமல் தமிழில் தந்திருக்கிறார் க. மூர்த்தி.

நில எல்லை, மொழி எல்லாவற்றையும் கடந்து நாடு முழுவதுமே மனிதர்களின் ஆரண்ய தாண்டவத்தால், அரசுகளின் ஒத்துழைப்புடன் கூடிய பெரு நிறுவனங்களின் லாபவேட்டை கருதி,  காடுகள்  உருக்குலைந்துபோவதுடன் மட்டுமின்றித்  தொல்குடிகளான மக்கள் எல்லாம் அகதிகளாக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில், ஒடிஸாவிலுள்ள ஜூடாபந்த் என்ற மலை-வனக் கிராமத்தின் பூர்வகுடிகளின் குடியுரிமை, அடிப்படை வசதிகளுக்கான போராட்டங்களை முன்வைத்து, இயற்கையுடன் பிறந்த மனிதர்களின் பாடுகளைச் சொல்லிச் செல்கிறது நாவல்.

ADVERTISEMENT

நேர்மையான ரயில்வே அலுவலரின் மகனான சோமன், அரசுப் பணித் தேர்வில் தோல்வியுற்றும் தொடர்ந்து முயன்று வெற்றி பெறுகிறான். இதனிடையே, தனிப்பட்ட முறையிலும் சமுதாயத்திலும், வன மக்களின் வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களை முன்னெடுப்பதில் ஏற்படும் அனுபவங்கள் நாவலாக்கப்பட்டுள்ளது.

ஏழை எளிய மக்களைப் புறக்கணித்து அரசு எந்திரங்கள் செயல்படும் விதத்துடன்  அதன் பக்கச்சார்பு மற்றும்  பெரிய மனிதர்களாகக் கருதப்படுவோரின் மலிவான செயல்பாடுகளும் எல்லாமும் நாவலுக்குள் வருகின்றன.

சோமன், மாலி, பானிட்டா, தாஸ் என நாவலில் எண்ணற்ற மனிதர்கள். பானிட்டா  தொடர்பான விஷயங்களில் பலவும் உள்ளத்தைத் தொடுபவை, ஒவ்வொரு பெண்ணும் கடந்து செல்லக் கூடியவை. சோமனின் வாழ்க்கையும்கூட.

சமகால மக்கள் வரலாற்றை, வாழ்க்கையை, போராட்டங்களைப் பேசும் இத்தகைய பிற மொழி நாவல்களின் மொழிபெயர்ப்பு தமிழில் மீண்டும் வரத் தொடங்கியிருப்பது பெரிதும் வரவேற்கத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT