நூல் அரங்கம்

அபிமானவல்லி

9th Jan 2023 02:42 PM

ADVERTISEMENT

அபிமானவல்லி - கல்கி ராஜேந்திரன்; பக். 240; ரூ.200; வானதி பதிப்பகம், சென்னை-17; 044-2434 2810.

'பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட தன் தந்தை கல்கி எழுதிய சரித்திரத் தொடர்களைப் படித்து, கல்கி இதழில் 1983-84-இல் ஆறுமாதங்கள் நூலாசிரியர் எழுதிய தொடர் கதை இது.

சோழ மன்னன் ஆதித்தன் தனது பிரதிநிதி விக்கியண்ணனை சேர நாட்டுக்கு அனுப்புகிறார். அங்கிருந்து பெரும் யானைப் படைகளை தஞ்சைக்கு அழைத்து வரும் பொறுப்பு விக்கியண்ணனுக்கு. முன்னதாக, திருப்புறம்பயத்தில் கோயில் சிற்பப் பணியில் தனது தந்தையுடன் இருந்த யுவதி அபிமானவல்லியைச் சந்தித்து அவள் மீது காதல் கொள்கிறான் விக்கியண்ணன். பல்கலைச்செல்வியான அபிமானவல்லி, தஞ்சையின் ராஜநர்த்தகியாகி தனி மாளிகையில் குடிவைக்கப்படுகிறாள்.

சேர நாட்டுப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், தஞ்சையில் அபிமானவல்லியை மாளிகையில் விக்கியண்ணன் சந்திப்பதில் இருந்து விறுவிறுப்படைகிறது கதை. அந்த மாளிகையில் செய்யாத கொலைக் குற்றத்துக்கு பொறுப்பேற்று விக்கியண்ணன் சிறைக்குச் செல்வதும், அதன்பின்னர் மன்னன் ஆதித்தனின் அன்பை அபிமானவல்லி பெறுவதும் என சிக்கல்கள் விழத் தொடங்குகின்றன.

ADVERTISEMENT

பல்லவ மன்னன் அபராஜிதன் சார்பாக வேவு பார்க்க வந்தவள்தான் அபிமானவல்லி என்பதும், தனது சாமர்த்தியத்தால் ஒற்றர் தலைவன் சாத்தனைக் கொன்று, அந்தப் பழியை விக்கியண்ணன் மீது போட்டதும் என கதையின் இறுதியில் சிக்கல்களை அவிழ்க்கும் விதம் அபாரம்.

அபிமானவல்லி யார் என்று அறிந்து அவளிடம் ஏமாறுவதுபோல மன்னன் ஆதித்தன் நடிப்பதும், அதன்மூலம் பல்லவ மன்னனை திசைதிருப்பி போரில் வீழ்த்துவதும், அபிமானவல்லியிடம் நெருங்குவதன் மூலம் பட்டத்தரசி இளங்கோபிச்சியை மன்னன் ஆதித்தன் பரிதவிப்புக்கு உள்ளாக்குவதும் என சரித்திர நாவல்களுக்கே உரிய திருப்பங்கள் வாசகர்களைக் கவரும். சதி, தந்திரம், துரோகம், வீரம் என முழுமையான சரித்திர நாவல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT