நூல் அரங்கம்

லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம்

6th Feb 2023 01:02 PM

ADVERTISEMENT

லால் பகதூர் சாஸ்திரியின் மர்ம மரணம் - சக்திவேல் ராஜகுமார்; பக். 136; ரூ.160; சுவாசம் பதிப்பகம், சென்னை - 127; 8148066645.
 பிரதமராக இருந்தபோதே மறைந்த லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்திலுள்ள மர்மத்தையும் மறைக்கப்பட்ட சரித்திரத்தையும் எண்ணற்ற மேற்கோள் தகவல்களுடன் விவரிக்கிறது இந்த நூல்.
 வெளிநாட்டில் முகாமிட்டிருந்தபோது சந்தேகத்துக்குரிய வகையில் நேரிடுகிறது சாஸ்திரியின் மரணம். இதுதொடர்பாக எழுப்பப்பட்ட ஐயங்களை இந்திய அரசும் அரசு அமைப்புகளும் ஏன் கண்டுகொள்ளவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது.
 தாஷ்கண்ட் உடன்பாடு மட்டுமின்றி, மரணத்துக்குப் பின்னால் இவர்கள் எல்லாம் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தையும் முன்வைக்கிறார் நூலின் ஆசிரியர்.
 பள்ளி ஆவணங்களில் தன் பெயரில் சேர்க்கப்பட்டிருந்த வர்மா என்ற ஜாதிப் பெயரை அகற்றச் செய்தவர் அவர். சாஸ்திரி என்பது பின்னாளில் அவர் படித்துப் பெற்ற பட்டம். உள்கட்சிப் பகை பற்றிய தகவல்களுடன் தாஷ்கண்டில் அவர் தங்கவைக்கப்பட்டிருந்த இல்லம் தனித்திருப்பது பற்றிய எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது பற்றியும் நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
 நேரு காலத்தில் செல்வாக்காக இருந்து சாஸ்திரி காலத்தில் வீழ்ந்துவிட்ட ஜெயந்தி தேஜா, சாஸ்திரியின் பயணத்தின்போது சம்பந்தமில்லாமல் தாஷ்கண்டில் இந்தியத் தூதருடன் இருந்தது பற்றி அரசுத் தரப்பில் எவ்வித விளக்கமுமில்லை என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது.
 சாஸ்திரியின் மரணம் நேரிட்ட நாள் இரவில் நடந்தவை யாவும் நேரில் பார்ப்பதைப் போல விவரிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகங்கள் பற்றிய நாடாளுமன்ற விவாதமும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பல்வேறு நூல்களில் எழுப்பப்பட்ட கேள்விகள், அவருடைய மரணத்தையொட்டி பிற நாடுகளின் பங்கு பற்றியும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT