நூல் அரங்கம்

"குழந்தைகள் வாழும் ஆலயம்'

6th Feb 2023 01:05 PM

ADVERTISEMENT

"குழந்தைகள் வாழும் ஆலயம்' (ஆரம்பப் பள்ளி ஆசிரியையின் அனுபவங்கள்), சா.ரஷீனா, பக் 112, விலை ரூ.120, அகநி வெளியீடு, எண் 3, பாடசாலை வீதி, அம்மையப்பட்டு, வந்தவாசி-604408, திருவண்ணாமலை மாவட்டம்.
 தினமும் காலையில் பள்ளிக்கு வந்து, மாலை வரை பாடம் நடத்தி விட்டுச் செல்வது மட்டுமா ஆசிரியரின் வேலை? அப்படியான ஆசிரியர் நான் இல்லை. முடிந்த வரை அரசு விதிகளுக்கு உள்பட்டு குழந்தைகளுக்கு கல்வியைத் தாண்டிய ஓர் வாசிப்பு உலகத்தை அறிமுகப்படுத்த வேண்டும். இப்படியான கல்வியே குழந்தைகளை அச்சமின்றி, துணிந்து தலை நிமிர்த்தி இந்த சமூகத்தில் வாழ வைக்கும் என்கிறார் பள்ளி ஆசிரியரும், இந்த நூலின் ஆசிரியருமான சா.ரஷீனா.
 ஆசிரியர் பணி, அரசுப் பள்ளி மாணவர்களின் உணர்வுகள் சார்ந்து தனது சொந்த அனுபவங்களை மிக சுவாரஸ்யமாக பதிவு செய்திருக்கிறார். முன் கதையுடன் என் கதை, ஒரு மாணவி ஆசிரியராகிறாள், பரவட்டும் விதைப்பந்து விநாயகர், தொற்றிலும் தொடர்ந்த கல்வி என தொடரும் அத்தியாயங்கள் நம்மை உண்மைக்கு அருகில் அழைத்துச் சென்று அமர வைத்து விடுகின்றன.
 "அரசுப் பள்ளிக்குள் மாணவி' என்ற நான்காவது அத்தியாயத்தில், "முதல் முறையாக அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் ஆசிரியராக நுழைகிறேன். உடல் சிலிர்த்தது. சுவர்களில் கிறுக்கப்பட்ட உயிரெழுத்துகள் ஓவியங்களாக என்னைப்பார்த்து சிரித்தன. ஓ...வென கூச்சலிட்டுக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருந்தனர் குழந்தைகள். நோட்டுப் புத்தகத்தின் காகிதங்கள், ராக்கெட்டுகளாகவும், பந்துகளாகவும் ஆங்காங்கே பறந்து கொண்டிருந்தன. என்னைப் பார்த்ததும் தொடர்ந்து விளையாடலாமா, வேண்டாமா என்ற கேள்விக் குறியுடன் தயங்கி நின்றனர்' என பதிவு செய்திருக்கிறார். இதை வாசிக்கும்போதே நாமும் ஒரு முறை அந்த வகுப்பறைக்குள் மீண்டும் சென்று வருவோமா என கேட்கத் தோன்றும். இன்னும் பல ஆசிரியர்கள் தங்களது கல்வி அனுபவங்களை எழுதிட இந்த நூல் தூண்டுகோலாக அமையும் என்பது நிச்சயம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT