நூல் அரங்கம்

சிவஞான போதம் கைவிளக்கு

26th Sep 2022 02:24 PM

ADVERTISEMENT

சிவஞான போதம் கைவிளக்கு -  திருவாரூர் இரா. சங்கரலிங்கம்; பக். 424; ரூ.450, லதா பப்ளிகேஷன்ஸ், திருவாரூர்; 9443273314. 

சைவ சித்தாந்த நூல்களில் முதல் நூலாகக் கருதப்படுகிற, மெய்கண்ட தேவநாயனார் அருளிய சிவஞான போதத்துக்கு மாதவச் சிவஞான  
முனிவர், பாண்டிப் பெருமாள் தொடக்கம் வ.உ.சி. என இதுகாறும் எண்ணற்றோர் உரைகள் எழுதியுள்ளனர்.

இறையை உணர்த்தும் சிவஞான போதத்தை  இன்றைய தலைமுறையினருக்கும் விளங்கவைக்கும் நோக்கில்,  திருவள்ளுவர், பாரதி, வ.உ.சி., திரு.வி.க., மறைமலையடிகள் ஆகியோரின் உரைகளையும் துணைக்கொண்டு கைவிளக்காக இந்த நூலில் காட்டியுள்ளார் நூலாசிரியர்.

12 சூத்திரங்களையும் அவற்றின் 39 அதிகரணங்களையும்,  81 எடுத்துக்காட்டு வெண்பாக்களையும் கொண்ட சிவஞான போதத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் பதவுரை, பொழிப்புரை, தெளிவுரை, சுருக்கவுரை, விளக்கவுரை என, தான் கற்றுணர்ந்த அனைத்தையும் தமிழறிஞர்களின் பார்வையுடன் சேர்த்துத் தந்திருப்பது சிறப்பு.

ADVERTISEMENT

சூத்திரங்களுக்கும் வெண்பாக்களுக்கும் பதவுரை எழுதும்போது படிக்கத் தகுந்தவாறு பாட்டின் சொற்களை முன்பின் நகர்த்திப் போட்டு எழுதி, எளிதில் கருத்து புரியவைக்கப்படுகிறது.

பேய்த்தேர் நீர் என்றுவரும் பேதைக்கு மற்றணைந்த பேய்த்தேர் அசத்தாகும்... என்ற எடுத்துக்காட்டு வெண்பாவுக்குத் தெளிவுரைக்க  ஒளவையார் பாடல்களைப் பயன்படுத்துகிறார். தேவநேயப் பாவாணர் குறிப்புகளையும் எடுத்தாளும் ஆசிரியர், இதுபோல ஒவ்வொரு பாடலுக்குமான உரைப் பொழிவில் அன்றும் இன்றுமான சைவ, தமிழாய்வு நூல்களின்  ஆழங்கண்ட முடிபுகளைப் பயன்படுத்திக் கொள்கிறார். "சைவ சித்தாந்திகள் முதலிய எல்லா வகுப்பினரும் தமிழறிவுள்ளவர்கள் ஆதரவு செய்வார்கள் என உறுதியாக நம்புகிறோம்' என உரைநூலுக்கு அந்தக் காலத்தில் பாரதி எழுதிய விமர்சனமே  இன்றும் இதற்கும் பொருந்தும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT