நூல் அரங்கம்

தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும்

26th Sep 2022 02:28 PM

ADVERTISEMENT

தனித்தமிழ் இயக்க வேரும் விழுதுகளும் - மறை. திரு. தாயுமானவன்; பக். 440; ரூ. 450, மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை 62; 044- 26371643. 

தனித்தமிழ் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி பற்றியும் தனித் தமிழ் இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற 13 தமிழறிஞர்கள் பற்றியுமான ஆழமான தகவல்களைக் கொண்ட நூல்.

நூல் நெடுகிலும் தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்த மறைமலையடிகளாரின் நாள்குறிப்புகள், வரலாற்றுச் செய்திகள், அரிதான  புகைப்படங்கள் விரவிக் கிடக்கின்றன. நூலாசிரியர்,  மறைமலையடிகளாரின் மகன்வழிப் பேரன் என்பது தரவுகளுக்கான உறுதித் தன்மையை அளிப்பவை.

தமிழ் பேசும் நாட்டில் தமிழைப் பாடமொழியாக்குவதே எத்துணை கடினமானதாக இருந்தது, இன்றும் ஆங்கிலம் நிலைத்திருக்க என்ன  காரணம் போன்றவற்றை விளக்கும் நூலாசிரியர், தமிழில் பிற மொழிக் கலப்புக்கான காரணங்களையும் அதை முறியடிக்க நடந்த முயற்சிகளையும் விவரிக்கிறார்.

ADVERTISEMENT

அடிகளாரின் வாழ்க்கையையும் சுருக்கமாகத் தந்திருப்பதுடன் அவர் காலத்துத் தமிழறிஞர்களுடன் கொண்டிருந்த தொடர்புகள், அவர்களின் செயல்பாடுகள் பற்றியெல்லாமும் நூலில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

தனித்தமிழ் இயக்கத்தின் அடிகளாரின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் பங்களிப்பு முதல் பாவாணர், கி.ஆ.பெ.வி. தொடக்கம் தமிழ்க்குடிமகன் வரை 13 தனித்தமிழ்மணிகளின் அறிமுகம் சிறப்பு. 

தமிழில் புழங்கும் சொற்களில் எது தமிழ், எது கலப்பு, எது வடமொழி, எது மணிப்பிரவாளம் என்றெதுவும் தெரியாமல் திணறும் இன்றைய தமிழ்க் குமுகாயத்துக்கு இத்தகைய நூல்களின் வருகை மிகவும் தேவை.

தமிழியக்கத்தினரும் தமிழ்த் தேசியத்தினரும் அவசியம் படித்தறிய வேண்டிய நூல். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT