நூல் அரங்கம்

ஊடு இழை

3rd Oct 2022 12:07 PM

ADVERTISEMENT

ஊடு இழை - பல்லவி குமார்; பக்.132; ரூ.130; தமிழ்ப் பல்லவி வெளியீடு, விருத்தாசலம், (கடலூர் மாவட்டம்; 04143-238369.

நூலாசிரியரால் பல்வேறு இதழ்களில் எழுதப்பட்ட 15 சிறுகதைகளின் தொகுப்பே இந்நூல். சீர்காழி, குறிஞ்சிப்பாடி, விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளை மையப்படுத்தி எழுதப்பட்ட பெரும்பாலான சிறுகதைகள் நடுத்தர, விளிம்புநிலை மனிதர்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தை எடுத்தியம்புகின்றன. 

தனது முதுமைக்காலத்திலும்கூட உழைத்துச் சாப்பிட வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்ட 'அம்மாசி தாத்தா'வின் இறுதிக்காலமும், அவரது மரணமும் பணத்தை மையப்படுத்தி இயங்கும் உலகின் கொடூர முகத்தை வெளிச்சம் போடுகிறது. சினிமாவில் தனக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருந்த துணை நடிகர் ஜீவராஜ்,  தனது நம்பிக்கை தகர்ந்தபோதும் நேர்மறையுடன் வாழ்க்கையை அணுகிய விதம் ஊக்கமளிக்கிறது. தறிக்காரர்

களின் அழுகுரல், உலகமயமாதலின் உரத்த ஓசையில் எவர் காதிலும் விழவில்லை என்கிற கருத்தை பதிவு செய்துள்ள 'உதிரும் கனவுகள்'  என்ற சிறுகதை நெசவாளர்களின் வாழ்வாதாரம் விசைத்தறியின் வருகையால் பாதிக்கப்பட்டதை பதிவு செய்துள்ளது. 

ADVERTISEMENT

வேலையில்லாமல் அவதிப்படும் வீரபாண்டி, பள்ளி அலுவலகப் பணத்தை தொலைத்ததால் பணியிலிருந்து நீக்கப்பட்டு பதவிஉயர்வையும் இழந்து நிற்கும் மாறன், தன்னை வளர்த்து, படிக்க வைத்து ஆளாக்கிய அண்ணனை அலட்சியப்படுத்தும் தம்பி உள்ளிட்ட கதாபாத்திரங்கள் இடம்பெற்ற கதைகள் மனிதனின் மனம் எவ்வளவு குறுகிப்போயுள்ளது என்பதை எடுத்துக்கூறுகின்றன.

எளிய மனிதர்களை மையப்படுத்தி, வாழ்வின் யதார்த்தங்களை மிக நேர்த்தியுடன் சிறுகதையாக பதிவு செய்துள்ளதே இந்நூலின் சிறப்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT