நூல் அரங்கம்

புலன் கடவுள்

3rd Oct 2022 12:08 PM

ADVERTISEMENT

புலன் கடவுள் - மீனா சுந்தர்; பக். 160; ரூ.190; டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், சென்னை-78; 99404 46650.

பேராசிரியரான  நூலாசிரியர், ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராகவும் இருக்கிறார்.  நூலில் இடம்பெற்ற 13 சிறுகதைகள் பல்வேறு இதழ்களில் வெளியானவை.
ஒவ்வொன்றும் மாறுபட்ட கோணத்திலேயே உள்ளன.

'செங்குத்தாய்த் தொங்கும் மஞ்சள் சரக்கொன்றை' என்று தொடங்கும் முதல் கதையில்,  கதையின் நாயகி பவுனரசியின் இளமைப் பருவத்தில் இருந்த துணிச்சலும், தந்தை மறைவுக்குப் பின்னர் கிடைத்த அரசுப் பணியில் இருப்பதும், காதல் கணவர் மறைந்தவுடன் அவரது நிலையும் சுவராசியமாகச் செல்கிறது. 

அலுவலகத்தில் செல்வாக்காய் திகழ்ந்தவள் லஞ்சமாகப் பிரியாணி கேட்டு சாப்பிடும்போது நேரிட்ட ஓர் சம்பவத்துக்குப் பின்னர்,  அவளுக்கு ஏற்பட்ட கதி படிப்போருக்கு உள்ளம் பதைபதைக்கிறது.  

ADVERTISEMENT

அண்ணன் - தங்கை உறவின் முக்கியத்துவத்தை விளக்கும் 'பெருகும் வாதையின் துயர நிகழ்' என்ற சிறுகதையும்,  கிராமத்து வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வரும் 'மிதவை'  சிறுகதையும், பழனி  நகர வாழ்க்கையை கண் முன்னே கொண்டு வரும் வகையில் 'நியதி' என்ற சிறுகதையும்,  

காதலித்து திருமணம் செய்து கொண்ட  அனந்தநாயகி தனது கணவர் உடல்நலமற்று கிடக்க, உறவினர்களும் உதாசீனப்படுத்த, தனது தாய் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி வேறு எங்கோ சென்று பணம் சம்பாதித்து வாழ்க்கை நடத்தும் கொடுமையை சித்திரிக்கும் 'மாமிச வெப்பம்' என்ற சிறுகதையும் படிக்கப் படிக்க விறுவிறுப்பை கூட்டுகின்றன.

'புலன் கடவுள்' சிறுகதையில் ஒரு காதல் நாடகத்தையே கண் முன் கொண்டு வந்துவிடுகிறார் நூலாசிரியர். இவ்வாறாக, ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அர்த்தத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது நூலின் சிறப்பு.  கதை ஆர்வம் உள்ளவர்கள் படிக்க வேண்டிய நூல் இது.

ADVERTISEMENT
ADVERTISEMENT