நூல் அரங்கம்

தமிழகக் கலைகள்

3rd Oct 2022 11:56 AM

ADVERTISEMENT

தமிழகக் கலைகள் - பேராசிரியர் மா. ராச மாணிக்கனார்; பக். 114; ரூ.120, காவ்யா, சென்னை- 24; 044-23726882. 

தமிழர் வரலாறு, பண்பாடு பற்றி  எழுதிய எண்ணற்ற நூல்களில் ஒன்று, தமிழகக் கலைகள். கலைகள் பற்றிய சிறந்ததோர் அறிமுகத்தை எழுதியுள்ள ஆசிரியர், ஆய கலைகள் அறுபத்து நான்கு எனப்படுபவை பற்றியும் பெளத்த, சமண நூல்களில் தெரிவிக்கப்படும் கலைகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, பதினொரு கலைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, சங்க காலத்தில், இடைக்காலத்தில், பல்லவர் காலத்தில், சோழர் காலத்தில், பாண்டியர் காலத்தில் எனப் பகுதிகளாகப் பிரித்து விவரிக்கிறார்.

கட்டடக் கலை பற்றிக் கூறும்போது, கோயில்கள், அரண்மனைகள் எனக் கட்டுமானங்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதுடன் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் பற்றிய தகவல்களும் நூலில் தரப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ஓவியக் கலையில் சித்தன்னவாசல், தஞ்சைப் பெரிய கோயில் ஓவியங்களை அறிமுகப்படுத்துவதுடன், நாடகக் கலையில் கூத்தில் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டின் நாடகங்கள் வரையிலான வளர்ச்சி விவரிக்கப்பட்டுள்ளது.

சங்க காலத்து வீரக்கற்கள், வழிபாட்டு உருவச் சிலைகள், பல்லவர், சோழர் காலக் கோயில் சிற்பங்கள்,  விஜயநகர வேந்தர்கள், நாயக்கர்கள் கால சிற்பங்கள் என சிற்பக்கலை குறித்தும் விளக்கப்படுகிறது.

நம் நாட்டுச் சிற்பங்களும் அயல்நாட்டுச் சிற்பங்களும்  வேறுபடும் விதத்தை மயிலை சீனி வேங்கடசாமியின் மேற்கோள் கொண்டு விளக்கும் ஆசிரியர், நூலில் தேவைப்படும் இடங்களில் கலைகள் சார்ந்து மிக முக்கியமான அறிஞர்களின் மேற்கோள்களையும் எடுத்தாண்டுள்ளார்.

மருத்துவக் கலை பற்றி இலக்கியங்கள், புராணங்களிலிருந்து எடுத்துக்கூறுவதுடன் கல்வெட்டுச் சான்றுகளும் காட்டப்படுகின்றன. தத்துவக் கலையில் அறிமுகப்படுத்தப்படும் தலைப்புகளைப் பற்றித் தனித்தனி நூல்கள் எழுதலாம். பரந்த பார்வையில் தமிழகக் கலைகள் பற்றி சுருக்கமான அறிமுகம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT