நூல் அரங்கம்

கலித்தொகை ஓர் எளிய அறிமுகம்

3rd Oct 2022 11:58 AM

ADVERTISEMENT

கலித்தொகை ஓர் எளிய அறிமுகம் - விஜயானந்தலட்சுமி; பக். 270; ரூ.270; சந்தியா பதிப்பகம், சென்னை-83; 044-24896979.

சங்க இலக்கியத்தின் எட்டுத்தொகை நூல்களுள் ஆறாவது நூல் கலித்தொகை. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐந்திணைகளைப் பேசும் அகப்பொருள் நூல் இது. ஐந்திணைகளில் தலா ஒன்றை பெருங்கடுங்கோ, கபிலர், மருதன் இளநாகனார், சோழன் நல்லுருத்திரன், நல்லந்துவனார் ஆகியோர் படைத்துள்ளனர்.

துள்ளலோசையும், நாடகத்தன்மையும் கொண்ட பாடல் வரிகள் கலித்தொகையின் சிறப்பு. கலித்தொகையில் என்ன இருக்கிறது என இன்றைய இணையகால வாசகர்களுக்கு எளிய முறையில் அறிமுகம் செய்திருக்கிறார் நூலாசிரியர். கலித்தொகைக்கான உரையாக இல்லாமல், தான் விரும்பிக் கற்ற பாடல்களை 46 தலைப்புகளில் கட்டுரைகளாக அளித்துள்ளார்.

'துன்பம் துணையாக நாடின், அது அல்லது
இன்பமும் உண்டோ, எமக்கு?'

ADVERTISEMENT

என்ற பாடல் வரிகளுக்கு 'காடும் மலையும் தலைவியை வருத்தும்; மலையே பாலையாகி நிற்கும். அதனால் துன்பம் தன்னோடு போகட்டுமே என எண்ணும் தலைவனிடம், உன் வழித்துணையாக வருவதல்லாத இன்பம் வேறு இல்லை என்கிறாள் தலைவி' என விளக்கம் அளிக்கிறார் நூலாசிரியர். இவ்வாறு நூல் முழுவதும் கலித்தொகையில் தான் கற்றுத் தெளிந்தவற்றை சுவையாகத் தந்திருக்கிறார்.

வாசிப்புக்கு நேரமில்லாத இன்றைய இணைய உலகிலும் தமிழின் சுவையைத் தேடும் வாசகர்களுக்கு தமிழ் விருந்து இந்த நூல்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT