நூல் அரங்கம்

முதன்முதலில் மதுரையில்தான்

3rd Oct 2022 12:02 PM

ADVERTISEMENT

முதன்முதலில் மதுரையில்தான் - எஸ்.கணேசன்; பக். 172; ரூ.100;  சண்முகம் பப்ளிகேஷன்ஸ் & பிரிண்டர், மதுரை; 97863 89946.

தமிழ் வளர்ச்சிக்கும், ஆன்மிகத்துக்கும் பெருமை சேர்க்கும் மதுரை.  இந்தத் தூங்கா நகரின் பெருமைகளைத் தொகுத்து நூலாக்கப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் மதுரையை மையப்படுத்தி சுழன்ற ஆட்சி முறைகள், அரசியல், ஆன்மிகம், தமிழ் வளர்ச்சி, முக்கிய நிகழ்வுகளை ருசிகரமாக நூலாசிரியர் விளக்கியுள்ளார். 

ஆலயப் பிரவேசம் முதலில் நடந்தது, சத்துணவுத் திட்டத்துக்கு வழிகாட்டியது,  பால்  கூட்டுறவுச் சங்கங்கள் முதலில் தோன்றியது,  ஒரு பெண் ஆட்சி செய்ததது, , வரலாற்று சிறப்புமிக்கத் தீர்மானங்கள் நிறைவேற்றிய நகராட்சி..... என்று மதுரையின் பெருமை நூற்றுக்கணக்கில் இருப்பதை நூலின் வாயிலாக அறிய முடிகிறது.

நேதாஜி தனது ராணுவப் படைக்கு வீரர்களைத் தேர்வு செய்தபோது,  மதுரை என்ற சொன்ன வீரரை "முதலில் நிற்பது மதுரைக்காரன்' என்று பாராட்டிய தகவலும், எம்ஜிஆருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மதுரைக்காரர்கள் என்ற தகவலும் வியப்படைய வைக்கிறது.

ADVERTISEMENT

பாண்டியர், நாயக்கர் கால ஆட்சியில் நடைபெற்ற சுவாரசியங்கள் முதல் நிகழ்கால அரசியல் வரையில் மதுரையை மையப்படுத்தி நடைபெற்ற முக்கிய அரசியல் நிகழ்வுகள் நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் மதுரையை மையப்படுத்தி பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளதும், இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் வீரம் விளைந்திருப்பதன் பெருமைகளும் அசர வைக்கிறது.

வரலாற்றிலும், அரசியலிலும் அறியாத தகவல்கள் பல இந்த நூலில் இடம்பெற்றுள்ளது சிறப்புக்குரியது. தென் மாவட்ட மக்கள் மட்டுமின்றி,  தமிழர்கள் அனைவரும் படித்தறிய வேண்டிய விஷயங்கள் நிறையவே உள்ளன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT