நூல் அரங்கம்

சின்ன மறவர் சீமை சீர்மிகு சிவகங்கைச் சீமை

21st Nov 2022 01:45 PM

ADVERTISEMENT

சின்ன மறவர் சீமை சீர்மிகு சிவகங்கைச் சீமை - டாக்டர் எஸ்.எம். கமால்; பக். 352; ரூ. 370, காவ்யா, சென்னை - 24; 044-23726882. 

சிவகங்கைச் சீமையின் வரலாற்றுத் தகவல்கள், நாட்டுப் பாடல்களைக் கொண்டு பல  நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் உண்மைகளையும் கற்பிதங்களையும் பிரித்தறிய முடியாத சூழ்நிலையில்,  உறுதிப்பட்ட தரவுகளின் அடிப்படையில் சிவகங்கைச் சீமை பற்றிய வரலாற்றைச் சிறப்பாக விவரிக்கிறார் வரலாற்றாய்வாளர் எஸ்.எம்.கமால்.

சேதுபதிகள், மறவர்கள் வரலாறு தொடர்பான ஆய்வுகளில் வல்லுநரான நூலாசிரியர், சிவகங்கைச் சீமையைச் சுற்றி மருது சகோதரர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களைத் 
தவறெனச் சான்றுகளுடன் நிராகரிக்கிறார்; ஆங்கிலேயர்களின் குறிப்புகளை எடுத்தாள்வதில் என்ன தவறென்றும் வினா எழுப்புகிறார். 

முதல் மன்னர்  சசிவர்ணப் பெரிய உடையாத் தேவர் தொடங்கி, இடையில் முத்துவடுகநாதர், வேலு நாச்சியார், வெள்ளை நாச்சியார் எனக் கடைசி மன்னர் விசயரகுநாத பெரிய உடையாத் தேவர் வரையிலான வரலாற்றுச் சம்பவங்கள் கோவையாக விவரிக்கப்படுகின்றன. இவற்றுக்கிடையிலேயே  அதிகார மோதல்கள், மாற்றங்கள், சமாதானங்கள் பற்றியும்  குறிப்பிடப்படுகின்றன.  மன்னர்கள் பற்றிய தகவல்களைக் கொண்ட செப்பேடுகளின் விவரங்களும்  நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

சிவகங்கைச் சீமை பற்றிச் சில நூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ள சீமை பற்றிய குறிப்பிட்ட தகவல்களை எடுத்துக்கொண்டு, எந்தவிதத்தில் அவை தவறானவை என்று ஒவ்வொன்றாக விளக்குகிறார் கமால். 

எண்ணற்ற ஆவணத் தரவுகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட சிறந்த ஆவணமெனக் குறிப்பிடத்தக்க இந்த நூல் வரலாற்றை வாசிப்பவர்களுக்குப் பெருவிருந்து. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT