நூல் அரங்கம்

அரண்மனை வனம் (சிறுகதைத் தொகுப்பு)

21st Nov 2022 01:52 PM

ADVERTISEMENT

அரண்மனை வனம் (சிறுகதைத் தொகுப்பு) - இந்திரநீலன் சுரேஷ்; பக். 148 ; ரூ. 200; கலைமகள் பப்ளிகேஷன்ஸ்,  சென்னை - 4;  044- 2498 1699.

இந்தத் தொகுப்பில் உள்ள 23 கதைகளுமே ஒவ்வொரு கோணத்தில் நமது மனதில் ஆழப் பதிகின்றன.  கடைசிக் கதையான  'மின்னி' வாழ்வின் அநர்த்தத்தை மின்னல் போலத் துலங்கச் செய்து மனதைப் பிசைகிறது.

ராமாயணக் காப்பிய மாந்தரான லட்சுமணனின் மனைவி ஊர்மிளையின் பார்வையில் விரியும் பெண்ணியச் சிந்தனையின் விளக்கமே 'அரண்மனை வனம்' சிறுகதை. 

'27-ஆம் தலைமுறை' சிறுகதையில் அமுதீசர் கோயில் அர்ச்சகர் சங்கரன், அவரது மனைவி கற்பகம் ஆகியோரின் பார்வையில் வாழ்வின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. கதையின் முடிவு அனந்தம். 'ஸ்வேதா யுகேஜி-2பி', சிறிய சிறுகதைதான். ஆனால் வெட்கத்துடன் சிரிக்கும் சிறுகுழந்தை ஸ்வேதாவை மனக்கண்ணில் தரிசிக்கும்போது நமது முகத்தில் தானாக முறுவல் முகிழ்க்கிறது. அதேபோலத் தான், 'சாலையில் ஒரு சம்பவம்' சிறுகதையின் நாயகியான, கட்டைவிரல் உயர்த்தி மானுடநேயத்தைக் காட்டும் சிறுமியும்.
'நினைவுகள் அழிவதில்லை' நாயகி வைஜெயந்தி போல பலருக்குள்ளும் வெண்சிறகு பறந்துகொண்டுதானிருக்கிறது.  'காட்டு வெளியினிலே' காவல் காக்கும் பிச்சியின் தாய்மை உணர்வும் மனதை வருடுகிறது.

ADVERTISEMENT

நூலாசிரியர் இந்திரநீலன் சுரேஷ் மிகத் தாமதமாக தமிழ் எழுத்துத் துறைக்குள் நுழைந்திருக்கிறார்.  இந்தத் தொகுப்புக்கு,  'கலைமகள்' ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் அணிந்துரையும், எழுத்தாளர் வித்யா சுப்பிரமணியம்  முன்னுரையும் எழுதி இருப்பது சிறப்பு.

ADVERTISEMENT
ADVERTISEMENT