நூல் அரங்கம்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

21st Nov 2022 01:48 PM

ADVERTISEMENT

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு - சி.சரவண கார்த்திகேயன்; பக். 912; ரூ.1000; கிழக்கு பதிப்பகம், சென்னை - 14. 044-42009603

சோழப் பேரரசின் வரலாற்றைப் பின்புலமாகக் கொண்டு, சுமார் 1000 வருடங்களுக்கு  முன்பு இளவரசன் ஆதித்த கரிகாலனை கொலை செய்தது யார் என்ற கேள்விக்கான விடையைத் துப்பறியும் புனைவு இது. 

சேவூர் போரில் வீரபாண்டியனை தலைகொய்து கொன்ற ஆதித்த கரிகாலனை பழிதீர்ப்பதற்கு காத்திருக்கும் பாண்டிய ஆபத்துதவி பரமேஸ்வரன் சகோதரர்கள்; ஆடலரசி ஸிதாரை மீது காதல், பரத்தையர் மீதுள்ள மோகத்தால் தனது மகள் பெருந்தேவியைத் தவிர்த்த கரிகாலன் மீது வன்மத்தில் இருக்கும் பழுவேட்டரையர்; பேரரசர் சுந்தர சோழருக்குப் பிறகு மணி மகுடத்தை கைப்பற்றியே தீருவது என்ற வேட்கையுடன் இருக்கும் மதுராந்தகர், குந்தவை - வந்தியத்தேவன் - ஆகியோர் கரிகாலனைக் கொல்லத் திட்டம் தீட்டுகின்றனர்.

சோழத்தின் தலைசிறந்த ஒற்றர்களான சாண்டில்யன், கல்கி  (அந்தப் பெயர்களைத் தவிர்த்திருக்கலாம்) ஆகியோர் துப்பறிந்து கிடைத்த தகவலின்படி,  அவையெல்லாம் கொலை முயற்சியாகத்தான் இருக்கிறதே தவிர கொலையாளி மேற்கண்ட யாருமல்ல.

ADVERTISEMENT

கரிகாலனைக் கொலை செய்தது யார்?,  சோழ அரசியலில் அவரது முக்கியத்துவம் என்ன?, கொலைக்கான காரணம் என்ன? என்கிற கேள்விகளுக்கான விடைகளை இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் வடித்துள்ளார் நூலாசிரியர்.  புனைவு என்றே எண்ண முடியாத அளவுக்கு சுவாரஸ்யம் குறையாமல் காட்சிகள் நிஜத்தில் இருப்பதுபோல படைத்திருப்பது நூலாசிரியரின் நீண்ட கால உழைப்பை எடுத்தியம்புகிறது.

பிற்காலச் சோழர்கள் வரலாறு என்பது கல்வெட்டு, செப்பேடுகள் வழியே நமக்கு கிடைக்கும் தர்க்கபூர்வ ஊகங்கள் மட்டுமே. இதனால் சோழ வரலாற்றில், குறிப்பாக கரிகாலனின் கொலையில் எங்கெல்லாம் புனைவுகளை இட்டு நிரப்ப முடியுமோ அங்கெல்லாம் புனைவுகள் தாராளமாகக் கையாளப்பட்டுள்ளன. 

அதேநேரத்தில்,   திராவிடம், பிராமண ஆதிக்கம், சமூக நீதி குறித்து பேசுவது நூலாசிரியரின் தனிப்பட்ட உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாது சற்றுத் தொய்வையும் ஏற்படுத்துகிறது. தேவையற்ற இடைச்செருகல் வலிந்து நுழைக்கப்படும் பரப்புரை.

ADVERTISEMENT
ADVERTISEMENT