நூல் அரங்கம்

வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம்

14th Nov 2022 12:02 PM

ADVERTISEMENT

வரலாற்றில் கிருஷ்ணகிரி மாவட்டம் -அறம் கிருஷ்ணன்; பக். 424; ரூ.500; அறம் பதிப்பகம், ஒசூர் - 635126; )7904509437.
 கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள கோயில்கள், கல்வெட்டுகள், நடுகற்கள், கோட்டைகள், பாறை ஓவியங்கள், அகழ்வாய்வுகளும் கள ஆய்வுகளும், புனரமைக்கப்பட்ட கோயில்கள் என்று ஒவ்வொரு தலைப்பிலும் செய்திகளைத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.
 வள்ளல் அதியமானின் கொடி "வில் கொடி' என்பதை இரு கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. பல மலைகளில் உள்ள பழங்கால ஓவியங்கள் குறித்த பதிவு வரலாற்று ஆய்வுக்கு உதவும்.
 ஆங்கிலேயர் காலத்தில் சேலம் மாவட்டத்தின் தலைநகரான ஒசூரில் ஆட்சியாளராக 1853 முதல் 1864 வரை இருந்தவர் எச். ஏ. பிரெட். அவர் பிரிட்டனில் வசிக்கும் தன் காதல் மனைவியை ஒசூருக்கு வரும்படி அழைத்தபோது, லண்டனில் உள்ள "கெனில்வர்த் கேஸில்' போன்று ஒரு மாளிகையைக் கட்டினால் வருவேன்' என்று தெரிவிக்கிறார். அதன்படியே பிரெட், ராமநாயக்கன் ஏரிக்கரையில் மாளிகையைக் கட்டினார். ஆனால் அது காதல் சின்னமாக மாறியதே தவிர, காதலி வசிக்கவில்லை. கட்டடம் கட்டுவதற்குப் பணம் கையாடல் செய்த குற்றச்சாட்டில், பிரெட் சிறை சென்றார் என்பதுதான் சோகம்.
 இதுபோல் தாடவேந்திரம் தரைக்கோட்டை, ராயக்கோட்டை மலைக்கோட்டை, ரத்தினகிரிகோட்டை, கிருஷ்ணகிரி மலைக்கோட்டை, தருமபுரி அதியமான் கோட்டை, தரைக் கோட்டை எனக் கோட்டைகள் வரலாறுகளைச் சுமந்து நிற்கின்றன.
 பல இடங்களில் நடுகற்கள் குவியலாக இருக்கின்றன. சூளகிரி அருகே உள்ள பெருமாள் கோயிலுக்கு விஜயநகர மன்னர் வீரகம்பண்ண உடையார் நிலம் தானம் செய்தது குறித்த கல்வெட்டு விவசாய நிலத்திலேயே வைக்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற பல அரிய செய்திகளை அறிய இந்த நூல் உதவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT