கன்னியாகுமரி முக்குவர் பண்பாட்டியல் வரலாறு - வறீதையா கான்ஸ்தந்தின்; பக். 296; ரூ.300; ஆதி பதிப்பகம், திருவண்ணாமலை-606806: 9159933990.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக அளவில் வசிக்கும் முக்குவர் சாதியினரின் அறிவியல் சார்ந்த புரிதல், வரலாறு, பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை, பேச்சு வழக்கு முதலிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. மீன்பிடித் தொழிலில் உள்ள இவர்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியது ஏன் என்றும் விளக்கப்பட்டுள்ளது. நவீன மீன்பிடி தொழில்நுட்பங்கள், சுனாமி போன்ற பேரலைகளாலும், புயல்களாலும் ஏற்பட்ட பாதிப்புகளையும் நூல் விளக்குகிறது.
இந்தச் சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்புகள், அரசியலில் பின்தங்கியிருப்பது குறித்தும் விளக்கம் உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியில்தான் சாதிகள் குறித்து நூல்கள் வெளியாகத் தொடங்கியது குறித்த நூலாசிரியரின் கூற்று சிந்திக்கவைக்கிறது.
பிறப்பு முதல் இறப்பு வரையிலான சடங்குகள், அதற்கான காரணம் குறித்து நூலாசிரியர் சிறந்த முறையில் விளக்கம் அளித்துள்ளார். மீனவர்கள் நலனுக்கான மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்த விளக்கம் உள்ளதோடு, அவர்களைப் பாதிக்கும் வகையிலான சட்டங்கள் கொண்டு வரப்பட்டது குறித்தும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள், எதிர்ப்புகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீன்பிடித்தல், படகுகளின் தன்மை, மீன்பிடித்தலின்போது நேரிடும் நிகழ்வுகள் குறித்தும் நூல் விளக்குகிறது. மீனவர்கள், சாதிகள் குறித்து அறிய விரும்புவோருக்கு இந்த நூல் ஓர் வரப்பிரசாதம்.