நூல் அரங்கம்

தியாகம் விளைந்த செம்புலம்

28th Mar 2022 09:13 AM

ADVERTISEMENT

தியாகம் விளைந்த செம்புலம் - பொன்முடி. சி.சுப்பையன்; பக். 320; ரூ.250; விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர்-1; 0422-2382614.

கோவைக்கு கிழக்கே இருபது கல் தொலைவில் நெடுஞ்சாலைகளின் தீண்டல் எதற்கும் சிக்காமல், உள் ஒதுங்கியிருக்கும் ஊர் அது. அங்கு பழமையும், புதுமையும் கலந்த ஒரு பண்பாடு உயிர்த் துடிப்போடு இன்றும் இருக்கிறது.

கம்பும், நெல்லும், தானியங்களும் மட்டுமல்லாது, உழைப்பும் விளைந்த பூமி கண்ணம்பாளையம் என்பதை நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் அறிய முடிகிறது.
பெரியவர்கள் பலரும் தந்த தகவல்களோடு ஊரில் தனது அனுபவங்களையும் தொகுத்தளித்துள்ளார் நூலாசிரியர். 

ஊரின் வரலாற்றை காலவரையறையோடு மெய்ப்பிப்பதற்கான சான்றுகள் ஏதும் இல்லையென்றாலும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதான சங்க இலக்கியத்தில் வரும் சாத்தந்தை, அந்துவன், கண்ணந்தை, கீரன், சேரன் போன்ற சொற்கள் இன்றைக்கும் இங்கே குலப்பெயர்களாக வழங்கி வருவதை இந்த ஊரின் பழந்தொன்மைக்குச் சான்றாக நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார்.

ADVERTISEMENT

1930-ஆம் ஆண்டு காந்தியடிகள் வடக்கே தண்டியில் மேற்கொண்ட வெள்ளையர்களுக்கு எதிரான உப்பெடுக்கும் அறப்போரின்போது இவ்வூரும் உப்பெடுத்தது; ஊர்ப் பெரியவர் வெங்கட்ராயரின் தலைமையில் திரண்ட இளைஞர்கள் கோவை வாலாங்குளத்தில் கூடி, உப்புக் காய்ச்சும் அறப்போரை நடத்திச் சிறை சென்றனர். 

அதேபோன்று 1938-இல் திரிபுராவில் நேதாஜி கூட்டிய காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க இந்த ஊரிலிருந்து இரு இளைஞர்கள் மிதிவண்டிகளில் புறப்பட்டனர். போராட்டச் செய்திகள் மட்டுமல்லாமல் உழவு, தொழில், கல்வி, பண்பாடு, மகளிர் நிலை ஆகியவை குறித்த தகவல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.   

தன் கிராமத்தில் பிறந்த புதிய தலைமுறை இளைஞனுக்கு அவ்வூரின் சரித்திரத்தைச் சொல்வதாக அமைகிறது இந்த நூல்.   

ADVERTISEMENT
ADVERTISEMENT