நூல் அரங்கம்

மனக் கதவுகளைத் திறந்தபோது..

6th Jun 2022 01:38 PM

ADVERTISEMENT

மனக் கதவுகளைத் திறந்தபோது...;  கே.ஜீவபாரதி; பக். 208; ரூ.180; ஜீவா பதிப்பகம், சென்னை-17; 99520 79787.

நூலாசிரியர் ஜீவபாரதி, முக்கியப் பிரமுகர்கள் சிலருடன் கண்ட நேர்காணலின் தொகுப்பே இந்த நூல்.  பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பாவேந்தர் பாரதிதாசன்,    அப்துற்-றஹீம், தா.பாண்டியன், கேப்டன் லட்சுமி, ஆர்.நல்லகண்ணு, ரஞ்சிதம் நல்லகண்ணு உள்ளிட்டோர் குறித்த சிறந்த நிகழ்வுகளை அறிய முடிகிறது.  

நல்லகண்ணுவின் பேட்டியில் ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து தெரிந்துகொள்ளலாம்.  தா.பாண்டியன், நல்லகண்ணு, ரஞ்சிதம் நல்லகண்ணு ஆகியோரின் இளமைக்கால போராட்டம் வியப்பை அளிக்கின்றன. பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாரதிதாசனிடம் சேர்வதற்கு சிபாரிசுக் கடிதம் கொடுத்தவர் பட்டுக்கோட்டை அழகிரி என்பது புதுத் தகவல்.

பாரதியார் பாடல்களை நேதாஜி விரும்பியிருக்கிறார் என்ற தகவலை ஐ.என்.ஏ.  மகளிர் படைப் பிரிவைச் சேர்ந்த ஜானகி தேவரின் பேட்டியின் மூலம் அறிய முடிகிறது.

ADVERTISEMENT

'எக்காலத்துக்கும் பேசத் தகுந்தவன்' என்று தொடங்கி,  அரசியல், இலக்கியம் குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தனின் பேட்டி நூலை மெருகேற்றுகிறது.

ராஜீவ் காந்தி படுகொலையின்போது,  தா.பாண்டியனும் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் இரவெல்லாம் அழுது கிடந்ததும், மறுநாள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார் என்ற தகவலை அறிந்தவுடன் நிம்மதி அடைந்தோம் என்று அவரின் மகள் ஹெலன் பிரேமா நவமணியின் பேட்டி மெய்சிலிர்க்க வைக்கும் பதிவு. தோழர்கள் கே.பாலதண்டாயுதமும், மோகன் குமாரமங்கலமும் விபத்தில் இறந்ததாக கிடைத்த செய்தி தா.பாண்டியனை நீண்ட நாள் வேதனையில் இருக்க வைத்ததாகவும் ஹெலன் பிரேமா தெரிவித்துள்ளது நெகிழ்ச்சி அடைய செய்கிறது.  பட்டுக்கோட்டையில் கல்யாணசுந்தரத்தின் சிலையை நிறுவ நூலாசிரியர் எடுத்த முயற்சியின் முழு விவரமும் நூலில் இடம்பெற்றுள்ளது. அறிய வேண்டிய வரலாற்றுப்  பதிவுகள் நூலில் இருக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT