நூல் அரங்கம்

பாரதி பாடிய மணக்குள விநாயகர்

24th Jan 2022 11:31 AM

ADVERTISEMENT

பாரதி பாடிய மணக்குள விநாயகர் - சொ. சேதுபதி; பக்.240; ரூ.225; ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை-17; )044- 2433 1510.
 மகாகவி பாரதியார் எல்லாத் தெய்வங்களையும் பாடியிருந்தாலும், அவர் முழுமுதல் பரம்பொருள் நிலையில் வைத்துப் போற்றியது விநாயகக் கடவுளையே என்பதை அவர் பாடிய "விநாயகர் நான்மணி மாலை' நூல் தெற்றென உணர்த்துகிறது.
 பாரதியாரின் புகழ்பெற்ற சொற்றொடர்களான "எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன்', "தவமே புரியும் வகையறியேன்', "அச்சமில்லை அமுங்குதலில்லை' "நமக்குத் தொழில் கவிதை', "பேசாப் பொருளை பேசநான் துணிந்தேன்', "அன்பிற் சிறந்த தவமில்லை', "கவலைப் படுதலே கருநரகு' போன்றவை இந்நூலில் இடம்பெற்றுள்ளவையே.
 "விநாயகர் நான்மணி மாலை' நூல் புதுச்சேரியிலுள்ள மணக்குள விநாயகர் மீது பாரதியார் பாடியதாகும். எனவே, மணக்குள விநாயகர் கோயிலின் தோற்றம், வழிபாடு, விநாயகர் நான்மணி மாலை இயற்றப்பட்டதன் பின்புலம், விநாயகர் நான்மணி மாலையில் உள்ள பாடல்கள், அவற்றின் பொருள் ஆகியவற்றை பதினான்கு கட்டுரைகளில் விரிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர்.
 பாரதியின் கவிதைகளுள் சற்றே சிதைவுடன் அமைந்த நூல், இந்த விநாயகர் நான்மணி மாலை. இந்நூலை முதன்முதலில் அச்சிட்ட பாரதி பிரசுராலயம், அச்சிதைவுகளை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கவியோகி சுத்தானந்த பாரதியார் ஆகியோரைக் கொண்டு திருத்தங்கள் செய்து 1929-இல் வெளியிட்டது. எனினும், அந்த முதல் பதிப்பு நூல் கிடைக்கவில்லை.
 விநாயகர் நான்மணி மாலை எப்போது எழுதப்பட்டிருக்கக்கூடும் என்பதை ஆய்வு செய்து (1916-க்கும் 1918-க்கும் இடைப்பட்ட காலத்தில்) அதனை இந்நூலில் ஒரு கட்டுரையாக்கியுள்ளார் நூலாசிரியர். நூலின் பின்னிணைப்பாக தரப்பட்டுள்ள 1917-ஆம் ஆண்டு பாரதியார் சுதேசமித்திரன் ஏட்டில் (சக்திதாஸன் என்ற புனைபெயரில்) எழுதிய நான்கு கட்டுரைகளைப் படிக்கும்போது பாரதியாரின் விநாயக பக்தி நன்கு புலப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT