நூல் அரங்கம்

சிறகுகள் விரித்திடு

24th Jan 2022 11:37 AM

ADVERTISEMENT

சிறகுகள் விரித்திடு (கவிதையும் கதையும்)- அ.அமல்ராஜ்; பக்.248; ரூ.200; விஜயா பதிப்பகம்,கோயம்புத்தூர்-1; )0422-2382614.
 ஒருவரின் ஆளுமை, அறிவாற்றலை மேம்படுத்துவதில் கதைகளின் பங்களிப்பு இன்றியமையாதது. அதேபோன்று சமூகப் பொறுப்பு மிக்க கவிதைகள் படிப்பவரின் மனதில் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் எளிமையாகப் புனையப்பட்ட நூறு இனிய கதைகளையும், அதைச் சார்ந்த அர்த்தமுள்ள நூறு கதைகளையும் சுமந்து வந்திருக்கிறது "சிறகுகள் விரித்திடு' நூல்.
 இதில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கதைகளும் மற்றும் கவிதைகளும் நம்மை புதிய பயணத்துக்கு அழைத்துச் செல்கின்றன. குறிப்பாக, "முடியும் என்றால் முடியும்', "தன்னம்பிக்கையின்றி ஏற்றமில்லை', "சூழலைச் சாதகமாக்கு', "எதிர் நீச்சல்', "வருந்துவதால் பலனில்லை', "சிறகுகள் விரித்திடு', "கல்வி', "போராட்டத்தின் பலன்', "தூண்டில்', "மாற்றம் வரும்', "சமூக ஊடகம்', "நான் ரசிகன்' ஆகிய தலைப்புகளில் இடம்பெற்றுள்ள கதைகள் அறத்தையும் போதித்து நம்பிக்கையையும் ஆழப்படுத்தி நமது பொறுப்புணர்வை அதிகரிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
 அதேபோன்று "முடியும் என்றால் முடியும்' கவிதையில் "பெருங்கடல் தாண்ட முடியும் பெருமைகள் சேர்க்க முடியும் அருஞ்செயல் நாளும் புரிந்து- நீ அழகுடன் வாழ முடியும்' என்ற வரிகளும், "ஆசைகள்' கவிதையில் "ஆசை அளவினை மீறிடின் அதுவே பேராசை ஆகிவிடும்; பாதையும் பயணமும் மாறிவிடும் பாரமாய் வாழ்வினை மாற்றிவிடும்' என்ற வரிகளும் முயற்சிக்கு எல்லையில்லை; ஆசைக்கு அளவுண்டு என்பதை உணர்த்துகின்றன.
 எளிமையான கவிதைகள் அதற்கேற்ற நன்னெறிக்கதைகள் அடங்கிய இந்த நூல் அனைத்து வயது வாசகர்களையும் நிச்சயம் கவரும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT