நூல் அரங்கம்

நாளும் ஒரு நற்சிந்தனை

5th Dec 2022 11:37 AM

ADVERTISEMENT

நாளும் ஒரு நற்சிந்தனை- நீதிபதி மு.கற்பகவிநாயகம்; பக். 280; ரூ.300; வானதி பதிப்பகம், சென்னை-17; )022-2434 2810.
 சாதாரணக் குடும்பத்தில் பிறந்து வழக்குரைஞராக இருந்து, ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி வரை உயர்ந்து ஓய்வு பெற்றவரான நூலாசிரியர் எழுதிய சிறப்பான நூல் இது.
 ஒவ்வொரு நாளுக்கு ஒரு நற்சிந்தனை என்ற வகையில், 365 நாள்களுக்கு அறிவு விதைகளை விதைத்துள்ளார். நாளுக்கு ஒன்றை படித்து, ஆண்டு முழுவதும் வாசகர்கள் படிக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார். ஆனால், படிக்கத் தொடங்கியவுடன் முழுவதும் படிக்கும் வரை நூலை கீழே வைக்கவே தோன்றவில்லை. அந்த அளவுக்கு நல்ல கருத்துகளை சில வரிகளில் ஒட்டுமொத்த வாழ்க்கையே புரியும் வகையில் எழுதியுள்ளது மிகவும் சிறப்பு.
 இந்த நூலில் உள்ள கருத்துகள் நூலாசிரியரின் அனுபவப் பாடங்களே என்று உச்சநீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளது சிறப்பு.
 "வாழ்க்கை வாழ்வதற்கே -அந்த வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் - பிறருக்கு பயனுள்ளவாறு வாழ்வது எப்படி' என்று, சாமானியர் ஒருவரை சாதனையாளராக மாற்றத் தூண்டும் வகையிலான கருத்துகள் நிறைய இடம்பெற்றுள்ளன. நூலாசிரியரின் முன்னுரையை படிக்கும்போது, வாழ்க்கையின் மகத்துவத்தை உணர முடிகிறது.
 சிறு வயதில் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த நூலாசிரியர் காலப்போக்கில் கடவுள் நம்பிக்கை தோன்றியது குறித்தும், பின்னர் வாழ்க்கையின் ஒவ்வோர் உயர்வுக்கும் கடவுளின் ஆசி இருக்கிறது என்ற வரிகளைப் படிக்கும்போது மனதில் ஒரு புத்தொளி பிறக்கிறது.
 சோர்ந்து கிடக்கும் ஒரு மனிதனை உழைப்பாளியாக, புத்திசாலியாக்கத் தூண்டும் வகையில் இந்த நூல் உள்ளது. படிக்க மட்டுமல்ல; நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பரிசளிக்கவும் ஏற்ற நூல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT