நூல் அரங்கம்

நெருங்கிவரும் இடியோசை

8th Aug 2022 12:52 PM

ADVERTISEMENT

நெருங்கிவரும் இடியோசை - பிபூதிபூஷண் பந்தோபாத்யாயா (தமிழில் - சேதுபதி அருணாசலம்);  பக். 184; ரூ.220;  சுவாசம் பதிப்பகம், சென்னை-127; 8148066645. 

'ஆஷானி சங்கேத்' என்ற புகழ்பெற்ற வங்க நாவலின் மொழிபெயர்ப்பான இந்த நூல், 1940களில் வங்கத்தில் ஆங்கிலேயர்களால் ஏற்படுத்தப்பட்ட  செயற்கைப் பஞ்சத்தைப் பின்புலமாகக் கொண்டுசெல்கிறது.

கஷ்ட ஜீவனத்திலிருந்த பிராமணரான கங்காசரண், மனைவி அனங்கா இரு குழந்தைகளுடன் போட்லா ஆற்றங்கரையில் உருவான புதுக் கிராமத்தில் குடியேறி ஆசிரியராகி, புரோகிதப் பூஜைகளும் செய்யத் தொடங்குகிறார்.

கொஞ்சம் படிப்பறிவை வைத்துகொண்டு, புத்திசாலித்தனமாக உள்ளூர் மக்களை இடைநிலை, தாழ்த்தப்பட்ட மக்களை  அவர்களின் அறியாமையைப் பயன்படுத்திவசப்படுத்தி மகிழ்ச்சிகரமாக  வாழ்வை நகர்த்துகிறது குடும்பம். 

ADVERTISEMENT

திடீரென பற்றாக்குறை தொடங்குகிறது, பஞ்சமாக மாறிப் பரவுகிறது. கங்காசரண் குடும்பத்தின் மீது மட்டுமல்ல, ஒட்டுமொத்த வங்கத்தின் மீதே கவிகிறது பஞ்சத்தின் இருள்நிழல்.

படிப்படியாக கங்காசரண் குடும்பம் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிராமமும் (ஒட்டுமொத்த வங்கமும்) வறுமையிலும் பசி பட்டினியிலும் உழல்கிறது, உயிர்பிழைக்கத் திணறுகிறது - இதன் ஒட்டுமொத்த சித்திரம்தான் நாவல்.

பஞ்சத்துக்கு நடுவே அனங்காவுக்கு இன்னொரு குழந்தை பிறப்பதும் குட்டிப்பையன் பிறந்திருக்கான், இனிப்பும் பணமும் தரணும் என்ற பெண் குரலைக் கேட்க, கங்காசரணுக்கு வழியும் கண்ணீரும், சேற்றுக்குளத்தில் மீன்களையும் நத்தைகளையும் மக்கள் தேடும் காட்சியும் குத்திக் கிழிக்கிறவை.

முழுமையாக முடிக்கப்படாமல் விடப்பட்ட படைப்பு என்று கருதப்பட்டாலும் நாவல் முடிகிறது; தேவைப்பட்டால் இப்போது தொடங்கிகூட இதே நாவலை இன்னொருவரால் தொடர்ந்து எழுதவும் முடியும், அதற்கான தொடர்ச்சியும் இருக்கிறது.

பதேர் பாஞ்சாலி, அபராஜிதா, அபுர் சன்சார் என்ற நீண்ட வரிசையில் இந்த நாவலையும் சத்யஜித் ராய் படமாக எடுத்திருக்கிறார் என்பது கூடுதல் அறிமுகம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT