நூல் அரங்கம்

மணிமேகலை

18th Oct 2021 11:45 AM

ADVERTISEMENT

மணிமேகலை- உரையுடன் (இரு பாகங்கள்) - உரையாசிரியர்: கரு.முத்தய்யா; முதல் பாகம்; பக்.384; ரூ.300;இரண்டாம் பாகம்: பக்.384; ரூ.300; கோவிலூர் மடாலயம், கோவிலூர்;) 04565- 238783.
 தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்று போற்றப்படுபனவற்றில் சிலப்பதிகாரம்,மணிமேகலை, சீவகசிந்தாமணி ஆகிய மூன்று நூல்கள் மட்டுமே முழுமையாகக் கிடைத்துள்ளன. மணிமேகலை நூலை முதன்முதலில் பதிப்பித்தவர் உ.வே.சா. அவரைத் தொடர்ந்து வேங்கடசாமி நாட்டார், ஒளவை துரைசாமிப்பிள்ளை போன்றோரும் உரையெழுதிப் பதிப்பித்தனர்.
 அந்த வகையில் மணிமேகலைக்கு செறிவாகவும், எளிமையாகவும் எழுதப்பட்ட உரையுடன் வெளிவந்துள்ள நூல் இது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட சிறந்த சீர்திருத்த நூல் மணிமேகலை. பசிப்பிணி இருக்கக் கூடாதென்றும், கள்ளும் பொய்யும் காமமும் கொலையும் களவும் இருக்கக் கூடாதென்றும், பரத்தைமை ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அழுத்தமாகக் கூறும் அறநூல் இது.
 விழாவறை காதையில் தொடங்கி பவத்திறம் அறுகெனப் பாவை நோற்ற காதை ஈறாக முப்பது காதைகள் மணிமேகலையில் உள்ளன.
 பலராலும் மேற்கோள் காட்டப்படும் "பாரக மடங்களும் பசிப்பிணி அறுக', "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' போன்ற பல கருத்துகள் இந்நூலில் உள்ளவையே.
 காப்பியத் தலைவியான மணிமேகலையின் வரலாற்றைப் பிறப்பில் தொடங்கி வரிசையாகக் கூறாமல் சிறிது சிறிதாகக் கூறுவதும், ஒவ்வொரு பாத்திரமும் கதையின் ஒவ்வொரு பகுதியைக் கூறுவதும் மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனாரின் புதிய சிந்தனைப் போக்குக்குச் சான்றுகள்.
 பல சமயத் தத்துவங்களையும், மனிதகுலம் பின்பற்ற வேண்டிய அறங்களையும் அழகாக விளக்கும் நூல் மணிமேகலை.
 சிலப்பதிகாரம் பரவிய அளவுக்கு மணிமேகலை தமிழர்களிடையே பரவாதது வியப்பளிக்கும் ஓர் உண்மையாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT