நூல் அரங்கம்

ஆத்திசூடிக் கதைகள்

18th Oct 2021 11:46 AM

ADVERTISEMENT

ஆத்திசூடிக் கதைகள் - பி.எஸ்.ஆச்சார்யா; பக்.224; ரூ.200; நர்மதா பதிப்பகம், சென்னை - 17;)044-2433 4397.
 ஒளவையாரின் ஆத்தி சூடியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்களுக்கு சின்னஞ் சிறு கதைகள் மூலம் நீதி போதிக்கும் சிறுகதைத் தொகுப்பு.
 இந்நூலில் ஆத்திசூடியின் கருத்துகளோடு, பல்வேறு கதை மாந்தர்களையும், விலங்குகளையும் வைத்து எளிய நடையில் கதைகள் புனையப்பட்டுள்ளன. இவை படிக்க சுவையாக இருப்பதுடன், சிந்தனைக்கும் விருந்தாக அமைந்துள்ளன.
 "ஊக்கமது கைவிடேல்' என்பதற்கு சிலந்தியின் விடாமுயற்சியைக் கண்டு ஊக்கம் பெற்ற ராபர்ட் புரூஸின் வாழ்க்கைச் சம்பவம் ஓர் உதாரணம்.
 "நேரிலும் பார்க்காத... நல்லதும் அல்லாத, யாருக்கும் ஒரு பலனுமில்லாத ஒரு தகவலைச் சொல்லி, தந்திரமாக நல்ல நட்பைப் பிரிக்கப் பார்க்கிறாயா?' என்று நரியிடம் சீறும் சிங்கத்தின் மூலம் பாடம் கற்பிக்கிறது "கண்டு ஒன்று சொல்லேல்' என்ற கதை.
 தேவையற்ற பயமே கவலைகளுக்கு காரணமாகிவிடும் என்பதை, யானையும் சிங்கமும் உரையாடும் "தோற்பன தொடரேல்' கதை மூலம் விளக்கியிருப்பது சிறப்பு. "நம் உடலும் சரி, மனமும் சரி, அவை சில பழக்க வழக்கங்களுக்கு கட்டுப்பட்டிருக்கும். அத்தகைய வழக்கத்துக்கு மாறான காரியத்தைச் செய்யக் கூடாது' என்பதை "இயல்பு அலாதன செய்யேல்' கதை எடுத்தியம்புகிறது.
 "நிலையில் பிரியேல்' என்ற கதை "நம் தரத்தை விட்டுக் கொடுத்து கேவலமாக நடந்து கொள்ளக் கூடாது; நம் பேச்சும் நடத்தையும், நமது கெளரவத்திற்கு ஏற்றாற்போல் இருக்க வேண்டும்' என எடுத்துக்காட்டுகிறது.
 ஆத்திசூடிக்குப் பொருத்தமான இந்தச் சிறுகதைகளுக்குப் பொருத்தமான சித்திரங்கள் மனதைக் கவரும் வகையில் வரையப்பட்டு இருக்கின்றன. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் விரும்பிப் படிக்க வேண்டிய நூல்களில் ஒன்று.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT