நூல் அரங்கம்

நிலைகெட்ட மனிதர்கள்

11th Oct 2021 02:41 PM

ADVERTISEMENT

நிலைகெட்ட மனிதர்கள் - க.முத்துக்கிருஷ்ணன்; பக்.168; ரூ.170; சந்தியா பதிப்பகம், சென்னை - 83; )044-2489 6979.
 சினிமா, அரசியல், இலக்கியம் ஆகிய மூன்று துறைகளும் எவரொருவரையும் அவ்வளவு எளிதில் ஏற்றுக் கொள்ளாது. இத்துறைகளில் பேரும் புகழும் ஈட்டுவது எளிதல்ல. கடும் உழைப்பும் முயற்சியும் இருந்தாலொழிய வெற்றி பெற இயலாது. ஆனாலும் எவ்வித அடிப்படை அறிவும் புரிதலும் இல்லாத சிலர் இத்துறைகளில் கோலோச்சுவது மட்டுமல்லாது கோடிக்கணக்கில் பணமும் ஈட்டுகின்றனர் என்பதையும் மறுக்க இயலாது. அப்படியானவர்களைப் பகடி செய்து புனையப்பட்ட நாவல்தான் 'நிலைகெட்ட மனிதர்கள்'.
 மளிகை மண்டி முதலாளி, அவருடைய வேலைக்காரன், மளிகை மண்டியில் கணக்கு எழுதும் தொழிலாளி ஆகிய மூவரும் இந்நாவலின் முக்கிய கதாபாத்திரங்கள். தன்னுடைய மளிகை மண்டி தொழிலைத் தவிர வேறு எதுகுறித்தும் அறிந்திராத அந்த முதலாளிக்கு திடீரென திரைப்படம் தயாரிக்க ஆசை ஏற்படுகிறது. தனது இரண்டு வேலைக்காரர்களுடன் களமிறங்குகிறார். பெருமுயற்சி ஏதுமின்றி எடுக்கப்பட்ட அத்திரைப்படம் எதிர்பாராதவிதமாக வெற்றியடைந்து, பெரும் லாபமும் ஈட்டுகின்றனர். அதனைத் தொடர்ந்து அரசியலில் ஈடுபட்டு ஆட்சி அதிகாரத்திலும் பங்கேற்கின்றனர். நிறைவாக இலக்கிய உலகுக்கும் சேவை செய்கின்றனர்.
 வெறும் மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையே நிகழும் உரையாடல்கள் மூலம் தமிழ்ச் சமூகத்தின் மூன்று பெரும் துறைகளில் அரங்கேறும் அபத்தங்களை நகைச்சுவையாக இந்நாவல் விவரிக்கிறது.
 தகுதியே இல்லாதவருக்கு கிடைக்கும் அங்கீகாரம், உழைக்காமல் ஈட்டும் பெரும் லாபம், சுயநலத்துக்காக எதையும் செய்யத் துணியும் எதேச்சதிகாரம் உள்ளிட்ட அபத்தங்களைக் காணும்போது, தகுதியுடையோரின் மனம் ஒன்று கொந்தளிக்கும் அல்லது பகடி செய்யும். இரண்டாவதைச் செய்துள்ளது "நிலைகெட்ட மனிதர்கள்'.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT