நூல் அரங்கம்

நல்லாரைக் காண்பதுவும்

11th Oct 2021 02:39 PM

ADVERTISEMENT

நல்லாரைக் காண்பதுவும் - டி.கே.எஸ்.கலை வாணன்; பக்: 416; ரூ.350 ; வானதி பதிப்பகம், தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17; )044-24342810.
 வாழ்ந்து மறைந்த நல்லோர்கள், வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லோர்கள் என மொத்தம் எழுபது பேர்களைத் தேர்வு செய்து, அவர்களின் நற்குணங்களையும், நல்ல தன்மைகளையும் சம்பவங்களுடன் இந்நூலில் விவரித்திருக்கிறார் நூலாசிரியர்.
 அவ்வை டி.கே.சண்முகத்தின் புதல்வரான இவர், எந்த வகையில் அவர்களோடு இணைந்திருந்தார் என்பதையும், அவர்களிடமிருந்து கற்றதையும், பெற்றதையும் சுவைபட ஒரு டைரி குறிப்பைப் போன்று எழுதிக் குவித்திருக்கிறார்.
 வாழ்ந்து மறைந்த நல்லோர் வரிசையில் காமராஜர், அண்ணா, க.அன்பழகன், ஜி.கே. மூப்பனார், ஜி.உமாபதி, நீதியரசர் பு.ரா. கோகுலகிருஷ்ணன், கி.ஆ.பெ. விசுவநாதம், வி.சி. குழந்தைசாமி, கொத்தமங்கலம் சுப்பு, பாலமுரளி கிருஷ்ணா, சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், அப்துல்ரகுமான் உள்ளிட்ட 43 பேரைப் பற்றியும், வாழ்ந்து கொண்டிருக்கும் நல்லோர் வரிசையில் ஸ்ரீலஸ்ரீ சீதாராம சுவாமிகள், ஏ.சி.முத்தையா, இராம.வீரப்பன், இல.கணேசன், நல்லி குப்புசாமி செட்டியார், அவ்வை நடராஜன், இளையராஜா உள்ளிட்ட 27 பேரைப் பற்றியும் இதுவரை அறியாத பல அரிய தகவல்களையெல்லாம் இதில் அறிய முடிகிறது.
 நாடகம், சினிமாக்கள் மீது அவ்வளவாக ஈடுபாடு இல்லாத காமராஜர் "முதலமைச்சர் நிவாரண நிதி'க்காக நாடகங்கள் நடத்தி, நிதி தரும்படி அவ்வை சண்முகத்திடம் கேட்டது; "உங்கள் படத்தில் நடிக்க எனக்கொரு வாய்ப்பு கொடுங்கள்!' என்று இயக்குநர் மணிரத்னத்திடம் சிவாஜி கணேசன் கேட்டது போன்றவை மறக்கமுடியாத நிகழ்ச்சிகள்.
 எத்தனை சந்திப்புகள்; எத்தனை அனுபவங்கள்; அத்தனையும் நினைவில் இருத்தி, யானையைப் பானைக்குள் அடைத்தாற்போன்று பலநூறு விஷயங்களை இந்நூலில் அடக்கிக் கொடுத்துள்ளார் நூலாசிரியர். இத்தனை பெரியோர்களுடன் அவர் பழகி இருக்கிறார் என்பதை நினைக்கையில் வியப்பு மேலிடுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT