நூல் அரங்கம்

மலரினும் மெல்லிது

4th Oct 2021 12:25 PM

ADVERTISEMENT

மலரினும் மெல்லிது - வெ.நல்லதம்பி; பக்.280; ரூ.300; வள்ளுவன் வெளியீட்டகம், சென்னை - 41; )044-2442 1155.
 மலர் சாகுபடியை மையப்படுத்தியும், மலர்கள் குறித்த உலகளாவிய பல நுணுக்கமான செய்திகளை நாவல் முழுவதும் ஆங்காங்கே பதிவுசெய்தும் புனையப்பட்ட நாவல் "மலரினும் மெல்லிது'.
 மலர் சாகுபடியை வாழ்வாதாரமாகக் கொண்ட, எளிய விவசாயக் குடும்பத்தை சேர்ந்த வேளாண் பல்கலைக்கழக மாணவி கமலாவும், அமெரிக்காவில் வசிக்கும் தமிழக வம்சாவளியைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரும் முதன்மைக் கதாபாத்திரங்கள்.
 இவர்கள் இருவருக்கும் மலர்கள் மீதும், புதிய தொழில்நுட்பங்கள் மூலம் மலர் சாகுபடியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று சந்தைப்படுத்துதல் குறித்தும் பெரும் கனவுகள் உண்டு. இவர்கள் இருவரும் மண வாழ்க்கையில் இணைவதோடு மட்டுமல்லாது, தங்களது கனவுகளை நனவாக்கி சாதனை படைக்கின்றனர்.
 இதுவொரு புனைவு நாவல் என்ற போதிலும் விவசாயம், மலர் சாகுபடி, மலர்களிலிருந்து வாசனை திரவியங்கள் தயாரிப்பு, புதிய ஒட்டு ரக மலர்கள், மலர் சாகுபடியில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து சர்வதேச அளவிலான பார்வை ஆகியவற்றை மிகவும் நுணுக்கமாகவும், விரிவாக வும் எடுத்தியம்புகிறது. இதுகுறித்த தரவுகள், விவரங்களைச் சேகரிக்க நாவலாசிரியர் மேற்கொண்ட உழைப்பும் முயற்சியும் அசாத்தியமானது.
 காதலும், மலர்களும் குறித்த சுவாரஸ்யங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளன.
 நல்லதொரு வாசிப்பனுபவத்தை ஏற்படுத்தும் இந்நாவல், வேளாண் - தோட்டக்கலைத் துறை சார்ந்த மாணாக்கர்களுக்கும் பயனுடையதாக இருக்கும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT