நூல் அரங்கம்

முடங்கலில் மலர்ந்த மலர்கள்

22nd Nov 2021 02:09 PM

ADVERTISEMENT

முடங்கலில் மலர்ந்த மலர்கள் (வாழ்வியல் கட்டுரைகள்) - தி.இராசகோபாலன்; பக்.208; ரூ. 200; வானதி பதிப்பகம், சென்னை- 17; )044- 2434 2810
 பொதுமுடக்க காலத்தில் எழுதப்பட்ட இருபத்தெட்டு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். பிரபல ஆளுமைகள் குறித்து 13 கட்டுரைகளும், திருக்குறள், சைவம் - வைணவம் குறித்த பெருமைகளைவிளக்கி ஒரு கட்டுரையும், தனிப்பாடல்கள், தாய்மை, ரமலான் ஆகியவை குறித்த 5 கட்டுரைகளும் தவிர, மற்றவை சமூகம் சார்ந்தவை என்று, இந்நூலின் வாழ்த்துரையில் உச்சநீதிமன்ற நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் பட்டியலிட்டுள்ளார்.
 இது தவிர, இக்கட்டுரைகள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் நூலாசிரியர் உழைப்பு தெரிவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அது உண்மைதான்.
 ஒவ்வொரு கட்டுரையிலும் ஏராளமான தகவல்கள். அவை அத்தனையும் நூலாசிரியரின் ஆழ்ந்த வாசிப்பால் வெளிப்பட்டிருக்கின்றன. குறிப்பாக முதல் கட்டுரையான "இசை மகா சமுத்திரம் : விளாத்திக்குளம் சுவாமிகள்' கட்டுரையின் மூலம் பாரதியாருக்கும் நல்லப்ப சுவாமிகளுக்கும் ஏற்பட்ட நட்பும், "வாராது வந்த மாமணி' கட்டுரையில் பாரதியாருக்கு புத்திரன் இல்லாததால் திருலோக சீதாராம் தன் வாழ்வு பரியந்தம் அமாவாசைக்கு தர்ப்பணம் கொடுத்ததையும், "நகல் எடுக்க முடியாத எம்.ஜி.ஆர்' கட்டுரையில் மு.வ.வின் இறுதியாத்திரையில் இறுதி வரை எம்.ஜி.ஆர். நடந்தே வந்தார் என்பதையும், "மகத்தான மார்க்சிஸ்ட் சங்கரய்யா' கட்டுரையில் சங்கரய்யாவின் தாத்தா, சங்கரய்யா என்கிற தனது பெயரையே பேரனுக்கு வைக்க வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்ததையும், "அண்ணல் அம்பேத்கர்' கட்டுரையில், அம்பேத்கர் சிறந்த தேசபக்தர் என்று காந்திஜி பாராட்டியதையும், "கலாúக்ஷத்ரா வடிவமைத்த ருக்மிணி தேவி' கட்டுரையில் இன்றைய பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் நட்டுவாங்கம், திரைச்சீலை அமைப்பு, நடராஜர் திருமேனி ஆகிய சம்பிரதாயங்களை வடிவமைத்தவர் ருக்மிணி தேவி அருண்டேல்தான் என்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. பல அரிய தகவல்களின் பெட்டகமாக, படிக்க படிக்க திகட்டாததாக இந்நூல் அமைந்திருக்கிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT