நூல் அரங்கம்

திருக்கோவையார் - பேரின்பப் பொருள் விளக்கம்

22nd Nov 2021 02:14 PM

ADVERTISEMENT

திருக்கோவையார் - பேரின்பப் பொருள் விளக்கம்- எட்டாம் திருமுறை- இரண்டாம் பாகம்- அ.ஜம்புலிங்கம்; பக்.408; ரூ.600; இந்துமதிபதிப்பகம், சிதம்பரம்; )04144-220980.
 பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையில் இடம்பெறும் திருவாசகம் பேசப்படும் அளவுக்குத் திருக்கோவையார் பேசப்படவில்லை என்பதற்குக் காரணம், அது ஐந்திணை ஒழுக்கம் பற்றிய சிற்றிலக்கிய நூல் என்ற தவறான கருத்து மக்களிடம் நிலவி வருவதால்தான். ஆனால், சிற்றிலக்கியத்தின் மூலம் மாணிக்கவாசகர் பேரின்ப- மெய்ஞ்ஞான தத்துவங்களையே சொல்லியிருக்கிறார், அது பேரின்பப் பெருநூலே என்று நுண்மாண்நுழைபுலம் கொண்டு அதை ஆய்ந்த சைவப் பேரறிஞர்களான யாழ்ப்பாணம் நவநீத கிருஷ்ண பாரதியார், கா.சு.பிள்ளை, சுவாமி சித்பவானந்தர், அழகரடிகள் போன்றோர் அதற்குப் பேரின்பப் பொருள் விளக்கம்தந்திருக்கின்றனர். அந்த வரிசையில் இந்நூலும் சேர்கிறது.
 திருவாசகத்தில் பரமாத்மா (இறைவன்) தலைவனாகவும், ஜீவாத்மா (உயிர்) தலைவியாகவும் சொல்லப்பட்டது. ஆனால், திருக்கோவையாரிலோ பரமாத்மா தலைவியாகவும், ஜீவாத்மா (உயிர்) தலைவனாகவும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது திருக்கோவையாரில் சிவம்-தலைவி; திருவருள்-பாங்கி (தோழி); உயிர்-தலைவன். தலைவியை (இறைவனை) அடைய, தலைவன் (உயிர்) செய்யும் முயற்சிகளே இதில் படிமுறைகளாக வைத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன.
 திருவாசகம் அன்பு நூலாகவும் திருக்கோவையார் அறிவு நூலாகவும் திகழ்கிறது.
 உலகியலில் தலைவன்-தலைவி களவு (காதல்) வாழ்க்கையையும், கற்பு (திருமணம்) வாழ்க்கையையும் தொடர்ச்சியாக நிரல்படவும், முழுமையாகவும் முதன்முதலில் 400 கட்டளைக் கலித்துறைப் பாக்களால் திருக்கோவையாரில் கூறியவர் மணிவாசகர்தான். மற்ற கோவை நூல்கள் இதில் மாறுபடுகின்றன.
 இயற்கை புணர்ச்சி தொடங்கி பரத்தையிற்பிரிவு வரை திருக்கோவையார் 25 அதிகாரங்களையும், ஒவ்வொரு அதிகாரங்களும் பல துறைகளையும் கொண்டது. இந்நூலில் 400 பாடல்களுக்கும் பேரின்பப் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT