நூல் அரங்கம்

இந்தியப் பொருளாதாரம்

1st Nov 2021 02:31 PM

ADVERTISEMENT

இந்தியப் பொருளாதாரம்- வரலாறு காட்டும் வழிகள் - மால்கம் ஆதிசேசய்யா; தொகுப்பாசிரியர்: ஆ.அறிவழகன்; பக்.256; ரூ.250; சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், சென்னை-20; )044 - 2441 2589.
 இன்றைய இந்தியப் பொருளாதாரநிலையின் தன்மையைத் தெரிந்து கொள்ள 1980- களிலும், 1990 -களிலும் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்குத் துணைபுரியும் வகையில் இந்நூலில்கட்டுரைகள் தொகுத்து வழங்கப்பட்டிருக்கின்றன.
 இந்தியப் பொருளாதாரத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பொருளாதார நிபுணரான நூலாசிரியரின் கருத்துகள் இந்தக் கட்டுரைகளில் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 காந்தியப் பொருளாதாரம் பற்றிய கட்டுரையில் "காந்தியைப் பொறுத்தவரை பொருளாதாரம் என்பது ஆன்மீகத்தின் வெளிப்பாடு' என்கிறார் நூலாசிரியர்.
 சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியப் பொருளாதாரம் தற்சார்பு நிலையை எட்டியுள்ளது. ஆனால், விவசாயத்தை வியாபாரரீதியாக்கும் போக்கு வேகமாக வளர்வதால், கிராமப்புறச் சந்தை ஒருங்கிணைந்து பரவலானது. நகர்ப்புறத் தயாரிப்புகள் கிராமங்களில் ஊடுருவவும் ஏதுவானது. இத்தகைய போக்கினால் அமைப்புசாராத தொழிலாளர்களிடையே வேலையின்மை அதிகரித்துவிட்டது என்கிறார் நூலாசிரியர்.
 வறுமைக்கும் சமத்துவமின்மைக்கும் முக்கியக்காரணம் தேசிய வருமானத்தில் தொழிலாளர் வர்க்கத்துக்குக் கிடைக்கும் சொற்ப பங்கே ஆகும். ஆனால் தேசிய வருமானத்தில் முதலாளிகள், பெரிய விவசாயிகளுக்குக் கிடைக்கக் கூடிய பங்கு அதிகரித்து வருகிறது. எனவே ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் வறுமையை ஒழித்தல் என்ற ஒரே குறிக்கோளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறும் நூலாசிரியர், படித்தவர்கள் ஏழைகளுக்குச் சேவை செய்வதும், ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதும்தான் முன்னேற்றத்துக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் வழியாகும் என்கிறார். இந்தியப் பொருளாதாரம் குறித்து தெளிவான புரிதலை வந்தடைய உதவும் நூல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT