நூல் அரங்கம்

ஊருக்குள் ஒரு புரட்சி

3rd May 2021 11:42 AM

ADVERTISEMENT

ஊருக்குள் ஒரு புரட்சி-சு. சமுத்திரம்; பக்.232; ரூ.250; அர்ஜித் பதிப்பகம், நாகர்கோயில்-2; )04652-227268.
 "ஒரு கோட்டுக்கு வெளியே' , "சோற்றுப் பட்டாளம் ' நாவல்களைத் தொடர்ந்து ஆசிரியர் சு. சமுத்திரத்தின் படைப்பு "ஊருக்குள் ஒரு புரட்சி' . தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நாவல் இது.
 நிலப்பிரபுத்துவத்தின் ஆணவமும், முதலாளித்துவத்தின் கபடமும், அரசாங்க யந்திரவாதிகளின் ஏனோதானோ போக்குகளும், கிராமங்களில் இப்போது நடைபெறும் நவீனச் சுரண்டலின் ஒருங்கிணைந்த மையமாக இருப்பதையும், ஏழைகள் கோழைகளாய் இருக்கும் வரை ஏய்ப்பவர்கள் தான் மேய்ப்பவர்களாக இருப்பார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுவதுதான் இந்த நாவல்.
 இதில் ஆண்டியப்பன், சின்னான், காத்தாயி ஆகிய கதாபாத்திரங்கள் ஆழமானவை. குறிப்பாக படிப்பறிவில்லாத ஆண்டியப்பன், அரசு நிகழ்ச்சியில் பெறும் மாடு- அனைத்துப் பிரச்னைகளுக்கும் பிள்ளையார் சுழி போடுகிறது. இதற்காக ஆண்டியப்பன் படும் பாடு சொல்லி மாளாது.
 கதையும் இதைச் சுற்றியே சுழல்கிறது. பிரசவித்த தன் தங்கை, பாலுக்கு ஏங்கும் குழந்தையைக் காப்பாற்ற முடியாத நிலையில் அவரது மனம் படும் பாடு கண்ணீரை வரவழைக்கிறது. காத்தாயியும் நம்மைக் கவரத் தவறவில்லை.
 பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஏற்படுத்தப்பட்டதாக கூறிக்கொண்டு தொடங்கப்பட்ட இளைஞர் மன்றமும் அதன் தலைவர் குமார், செயலர் மாணிக்கம் போன்றோரின் செயல்பாடுகளும், போட்டி இளைஞர் மன்றமும் பின்னர் அவை வீணாகிப் போனதும் வழக்கமானதுதான்.
 பிரச்னைகளுக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து புதிய விடியலை நோக்கி புறப்படுவோம் என்பதோடு நாவல் முற்றுப் பெறுகிறது.
 ஜாதிக் குடிசைகளும் சேரிக் குடிசைகளும் சேர்ந்தால் விடியல் என்பது வெகு தூரத்திலில்லை என்பதை நூலாசிரியர் அழுத்தமாகவே பதிவு செய்துள்ளார். அனைவரும் வாசிக்க வேண்டிய யதார்த்தமான நாவல்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT