நூல் அரங்கம்

மனத்தில் மலர்ந்த மடல்கள்

29th Mar 2021 10:40 AM

ADVERTISEMENT

மனத்தில் மலர்ந்த மடல்கள் - இறையன்பு;பக்.64; ரூ.40; கற்பகம் புத்தகாலயம், சென்னை-17; )044- 2431 4347.
 அஞ்சல் மூலம் கடிதம் எழுதுவது அறவே இல்லாமல் போன நிலையில், தன்னுடைய "மனத்தில் மலர்ந்த மடல்களை' இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார் நூலாசிரியர்.
 ஒரு தந்தை என்கிற முறையில் மகன்களுக்கு, கொஞ்சம் வயதானவர் என்கிற முறையில் கல்லூரிப் படிப்பில் காலடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு, பழைய விடுதி மாணவன் என்கிற முறையில் வீட்டில் இருந்து விடுதிக்குப் புலம்பெயர்ந்த இளம் நண்பர்களுக்கு, தகப்பன் என்ற நிலையிலிருந்து இன்றைய மாணவர்களுக்கு, பெற்றோர் என்ற நிலையில் இன்றைய பிள்ளைகளுக்கு, சக மனிதன் என்ற நிலையில் சம வயதுப் பெற்றோருக்கு, ஒரு மாணவன் என்கிற முறையில் ஆசிரியர்களுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன.
 பெற்றோர்களுக்கு எழுதியதாகட்டும், ஆசிரியர்களுக்கு எழுதியதாகட்டும் எல்லா கடிதங்களுமே இளம் வயதினரை மையங் கொண்டே சுழல்கின்றன. இன்றைய இளம் தலைமுறையினர் எதிர்கொள்கிற பல்வேறு பிரச்னைகளை எவ்வாறு அணுகுவது? அவற்றிற்கான தீர்வுகள் எவை? என்பனவற்றை மிக அழகிய நடையில் சொல்லோவியங்களாக வடித்திருக்கிறார் நூலாசிரியர்.
 "நான் சொற்களின் மூலம் உங்களுக்குக் கற்றுத் தர நினைப்பதைவிட, வாழ்வின் மூலம் கற்றுத் தர நினைப்பவையே அதிகம் ' என்று பெற்ற பிள்ளைகளுக்குக் கடிதம் எழுதுகிற நூலாசிரியர், சொற்களின் மூலம் இந்நூலில் கற்றுத் தருபவை ஏராளம்.
 கல்லூரியில் நுழைந்த ஒரு மாதத்துக்குள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் கூறுவதாகட்டும், விடுதியில் பயிலும் மாணவர்களுக்கு எப்படி விடுதியில் வாழ்வது என்பதற்கு அவர் வழங்குகிற திட்டமாகட்டும் எல்லாம் நடைமுறையில் கடைப்பிடிக்கத் தக்கவையாக இருக்கின்றன. இளம் தலைமுறையினர் ஒவ்வொருவரின் கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT