நூல் அரங்கம்

நபிகளாரின் பொன்மொழிகள் முஸ்னது அஹ்மத்

22nd Mar 2021 10:28 AM

ADVERTISEMENT

நபிகளாரின் பொன்மொழிகள் முஸ்னது அஹ்மத் - அரபு மூலம்: அபூ அப்தில்லாஹ் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்); தமிழில்: அ.அன்வருத்தீன் பாகவி, சா.யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி; பாகம் 1; பக்.726; ரூ.650; பாகம் 2; பக்.872; ரூ.650; ஆலிம் பப்ளிகேஷன் ஃபவுண்டேஷன், சென்னை-5; )044 - 4746 7373.
 1300 ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 780- களில் துர்க்மெனிஸ்தானில் பிறந்து ஈராக்கில் வாழ்ந்த இமாம் அகமது பின் ஹன்பல் என்பவர் தேடி ஆய்வு செய்து தொகுத்த "முஸ்னது அஹ்மத்' என்னும் நூல் தற்போது தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு முதல் இரண்டு பாகங்கள் வெளிவந்துள்ளன. இந்நூலின் அரபி மூலம் பதினாறு பாகங்களைக் கொண்டது. அதில் நபிகள் நாயகத்தின் 26 ஆயிரத்து 63 வாழ்வியல் பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நூல் உலகில் நூற்றுக்கணக்கான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
 நபிகள் நாயகத்தின் காலத்திலேயே நபிகள் அவர்களின் செயல்களைப் பார்த்தவர்களும், அவர்களால் கூறப்பட்டவற்றைக் கேட்டவர்களும் பல செய்திகளைப் பதிவுசெய்துள்ளனர். அந்தப் பதிவுகளின் உண்மைத் தன்மையினை - அவற்றைப் பதிவு செய்தவர்களின் நிலையை- ஆய்வு செய்து பலவீனமான பதிவு அல்லது சரியான பதிவு என்று தரம் பிரித்து, இரண்டையுமே பாதுகாத்து வருகின்றனர். அத்தகைய ஹதீஸ்கள் அடங்கிய நூல்களின் வரிசையில் புகாரி, முஸ்லிம், திர்மிதி, அஹ்மத் போன்ற நூல்கள் பிரதானமானவையாகும். ஏற்கெனவே மற்ற நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நிலையில் தற்போது முஸ்னது அஹ்மத் நூலின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 792 ஹதீஸ்கள் அடங்கியுள்ளன.
 இந்நூலில் இப்னு அப்பாஸ் ரலி அவர்களின் நான்காவது அறிவிப்பில், பெருமானார் அவர்களைப் பார்க்க வந்திருந்த ஒருவரின் வாய் துர்நாற்றம் வீசுவதை உணர்ந்த நபிகளார் அவரிடம், "பல் துலக்கவில்லையா?' என கேட்க, அவரோ "மூன்று நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை' என கூறுகிறார். உடனே அவருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்கிறார் பெருமானார் அவர்கள். இதில் சபைக்கு வருவோர் சுத்தமாக இருக்கவேண்டும் என்ற அறிவுறுத்தல் இருக்கிறது. பசித்தோருக்கு உடனே உணவு வழங்க வேண்டும் என்ற நடைமுறையை நபிகளார் தனது செயலால் உணர்த்துவதையும் காண முடிகிறது.
 பெருமானாரின் வாழ்வியல் பதிவுகளை அறிந்து கொள்ள அல்லது ஆய்வு செய்ய விரும்புபவர்களுக்கு இந்நூல் ஓர் வரப் பிரசாதமாகும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT