நூல் அரங்கம்

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சர்யமூட்டும் பெண்கள்

22nd Mar 2021 10:31 AM

ADVERTISEMENT

அறுபத்து மூவர் சரிதத்தில் ஆச்சர்யமூட்டும் பெண்கள் - ப.ஜெயக்குமார்; பக்.144; ரூ. 200; உமாதேவி பதிப்பகம், 8529, எல்.ஐ.ஜி-1, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, அயப்பாக்கம், சென்னை-77.
 அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஆண்கள் அறுபது பேர்; பெண்கள் மூவர். காரைக்கால் அம்மையார், இசைஞானியார், மங்கையர்க்கரசியார் மூவரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளால் நேரிடையாக (திருத்தொண்டத் தொகையில்) குறிப்பிடப்பட்டவர்கள். ஆனால், நாயன்மார்கள் பலரது வாழ்க்கையில் அவர்களுக்குப் பெருமளவில் உதவியதுடன், அவர்களை இறையருளுக்குப் பாத்திரமாக்கிய இல்லத்தரசிகள், சகோதரி, மகள் போன்றோரின் சிறப்புகளை உலகறியவில்லை என்பதுடன், நாம் உலகத்தாருக்கு உணர்த்தவில்லை என்பதுதான் உண்மை. அந்த அருஞ்செயலை இந்நூல் செய்திருக்கிறது.
 மேற்குறிப்பிட்ட மூன்று பெண் நாயன்மார்களோடு, பன்னிரண்டு நாயன்மார்களின் இல்லத்தரசிகளையும், மானக்கஞ்சாறரின் மகள், கோச்செங்கட்சோழனின் தாயார், திருநாவுக்கரசரின் சகோதரி ஆகியோரையும் இணைத்து, இப்பெண்களால் நிகழ்ந்த அற்புதச் செயல்களையும், இப்பெண்கள் மூலம் இறைவன் நிகழ்த்திய அருள் செயல்களையும் விவரிக்கிறது இந்நூல்.
 நல்வழி, திருவுலாமாலை, திருச்சண்பை விருத்தம், திருக்குறள், திருக்கழுமல மும்மணிக் கோவை, பெரிய திருமொழி, திருவருட்பா, பட்டினத்தார் பாடல்கள், நால்வர் நான்மணிமாலை முதலிய பக்தி இலக்கியப் பாமாலைகளையும் தொட்டுக்காட்டி விளக்கியிருப்பது சிறப்பு. "மின்னும் பெண்மை' என்று ஒவ்வொரு வரலாற்றின் இறுதியிலும், இப்பெண்கள் எப்படியெல்லாம் கணவருக்கும், தந்தைக்கும், தம்பிக்கும் உதவினார்கள் என்பதைக் கூறும் பதிவுகள் முத்தாய்ப்பானவை. பெண்மையைப் போற்றும் அற்புத நூல்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT